“6 பேர் தரதரவென்று இழுத்து சென்றனர்’’- முன்னாள் மிஸ் இந்தியா புகார்..!
6 சிறுவர்கள் தன்னை காரில் இருந்து தரதரவென்று வெளியே இழுத்ததோடு, ஊபர் ஓட்டுநரையும் தாக்கியதாக முன்னாள் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்ற அழகி புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு, மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றவர் உஷோஷி செங்குப்தா. கொல்கத்தாவை சேர்ந்த இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரங்க புகார் ஒன்றை முன்வைத்துள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “ கடந்த 17-ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து நானும் என்னுடன் பணிபுரியும் சக ஊழியரும் ஊபர் கேப்பில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது ஹெல்மெட் அணியாத சில சிறுவர்கள் பைக்கில் வந்து ஊபர் காரில் மோதினர். பின்னர் உடனடியாக பைக்கில் இருந்த இறங்கிய அவர்கள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடுத்த சில நொடித்துளிகளில் கிட்டத்தட்ட 15 சிறுவர்கள் ஒன்றுகூடி விட்டனர்.
பின்னர் அவர்கள் டிரைவரை தரதரவென்று காரில் இருந்து வெளியே இழுத்து அடிக்க ஆரம்பித்தனர். நான் காரில் இருந்து வெளியே இறங்கி கத்த ஆரம்பித்தேன். அத்துடன் சம்பவத்தை வீடியோவும் எடுத்தேன். பின்னர் அந்த வழியாக ஓடிச்சென்று அங்கு நின்றுகொண்டிருந்த போலீஸ் அதிகாரியை சந்தித்தேன். அவரிடம் சம்பவத்தை கூறி உடன் வருமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் சம்பவம் நடைபெறும் இடம் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது இல்லை எனக்கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் அவர்களிடம் இறைஞ்சி கேட்டுக்கொண்டேன். இல்லையென்றால் அவர்கள் டிரைவரை கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினேன். எனவே அந்த அதிகாரிகள் வர சம்மதித்தார்கள்.
போலீஸ் அதிகாரிகள் அந்த சிறுவர்களை பிடிக்க முற்பட்டபோது, அவர்களை தள்ளிவிட்டு சிறுவர்கள் ஓடிவிட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் இந்த விஷயத்தை நாளை காலை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்வோம் என டிரைவரிடம் கூறிய நான் என்னையும், என்னுடன் வந்தவரையும் வீட்டில் இறக்கிவிடும்படி கேட்டுகொண்டேன்.
ஆனால், என்னுடன் வந்தவர் அவர் வீட்டில் இறங்கும்வரை அந்த சிறுவர்கள் எங்கள் காரை பின்தொடர்ந்து வந்திருக்கின்றனர். பின்னர் அவர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்ததோடு, கற்களையும் வீசினர். என்னை தரதரவென்று வெளியே இழுத்து என்னுடைய செல்போனை உடைக்க முயன்றனர். நான் வேகமாக கத்தினேன். உதவிக்கு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்தனர். பின்னர் என் அப்பா, அக்காவிற்கு தொலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னேன்.
என் பிரச்னையை சொல்ல பவானிபோர் காவல்நிலையத்திற்கு சென்றேன். அப்போது மணி 1.30. ஆனால் அங்கு ஒரு பெண் போலீஸ் அதிகாரி கூட இல்லை. என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டுவிட்டு புகாரை பெற்றுக்கொண்டனர். ஆனால் ஊபர் டிரைவரின் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். ஏனென்றால் ஒரே நேரத்தில் ஒரு புகாருக்காக இரண்டு எப்ஐஆர் பதிய முடியாது என கூறிவிட்டார்கள்.
யாராவது உங்களுக்கு தொந்தரவு கொடுத்தாலே, தாக்கினாலோ முதலில் காவல்நிலையம் ஓடுவதற்கு முன்னால் அது உங்கள் எல்லைக்குட்பட்ட காவல்நிலையம் தானா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அவர்கள் புகாரை பெற மாட்டார்கள். மிஸ் இந்தியா போட்டியில் கொல்கத்தா சார்பில் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறேன். ஆனால் எனக்கே இப்படி நடக்கிறது. வெட்கக்கேடு” என பதிவிட்டிருந்தார்.
உஷோஷி செங்குப்தாவின் புகாரை ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலானது. இதனையடுத்து கொல்கத்தா போலீசார் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், “ இந்த பிரச்னையை மிக தீவிரமாக எடுத்துள்ளோம். பலர் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என பதிவிட்டுள்ளனர்.