தமிழ்நாட்டிலும் 2.. நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்.. என்ன காரணம்?
போதிய மாணவர்கள் சேர்க்கையின்மை, ஆசிரியர் பற்றாக்குறையால் நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2025-26ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வந்த 950-க்கும் மேற்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளும் (Courses) ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் சேராதது, தகுதிவாய்ந்த பேராசிரியர்களைத் தேவையான விகிதத்தில் நியமிக்கத் தவறியது, AICTE பரிந்துரைத்துள்ள போதிய உள்கட்டமைப்பு வசதிகள் (ஆய்வகங்கள், நூலகங்கள்) மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட 58 கல்லூரிகளில் பெரும்பாலானவை உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவை ஆகும்.
அதன்படி, உத்தரப் பிரதேசம்-12, மகாராஷ்டிரா-12, மத்தியப் பிரதேசம்-8, தெலங்கானா-4, பஞ்சாப்-4, ஆந்திரப் பிரதேசம்-3, ராஜஸ்தான்-3, தமிழ்நாடு-2, கர்நாடகா-2, குஜராத்-2 ஆகிய மாநிலங்களில் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஹரியானா, ஒடிசா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தலா 1 கல்லூரி மூடப்பட்டுள்ளது.
மூடப்பட்ட இந்த 58 கல்வி நிறுவனங்களில், 3 கல்லூரிகள் மட்டுமே அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆகும். மீதமுள்ள 55 கல்லூரிகளும் தனியாரால் நடத்தப்படும் சுயநிதி கல்வி நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. AICTE இந்த 58 கல்லூரிகளுக்கும் படிப்படியாக மூடுதல் என்ற உத்தரவை வழங்கியுள்ளது. அதன்படி, இந்தக் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களைப் புதிதாகச் சேர்க்க முடியாது. அதேநேரத்தில், ஏற்கெனவே அந்தக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் சீனியர் மாணவர்கள் தங்கள் படிப்பை எவ்வித தடையுமின்றி அதே கல்லூரியில் தொடர்ந்து படித்து முடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

