“கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்”- ஸ்மிருதி இரானி தகவல்
கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து கொரோனா பாதிப்பால், தாய், தந்தையை இழந்து நாடு முழுவதும் 577 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டுள்ள தகவலின்படி, “ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, அனைத்து மாநிலங்களிலும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரேதசங்களில் தாய், தந்தை இருவரையும் இழந்து 577 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த குழந்தைகளை காப்பாற்றி, ஆதரவு அளிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு பெற்றோர்களை பறிகொடுத்த இந்த குழந்தைகள் அனைவரும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நலனுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் 10 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.