கொரோனா கால மகத்துவர்: தகன மேடையில் பணியாற்றும் காவலர்

கொரோனா கால மகத்துவர்: தகன மேடையில் பணியாற்றும் காவலர்

கொரோனா கால மகத்துவர்: தகன மேடையில் பணியாற்றும் காவலர்
Published on

தன் குடும்பத்தைக்கூட பெரிதும் பொருட்படுத்தாதது இந்த கொரோனா சூழலில் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய உதவிவரும் காவலரின் செயல் பலரை நெகிழ்வைத்துள்ளது.

கொரோனா கொடுங்கதைகள் துயரத்தில் மூழ்கவைப்பதாக இருப்பதோடு, நெகிழவைப்பதாகவும் இருக்கின்றன. குறிப்பாக இந்த நேரத்தில் பலர் வெளியே வர பயந்துகொள்ள தன்னார்வலர்கள், பலர் தாமாக முன்வந்து இந்த தேசம் கொரோனாவில் இருந்து மீண்டு வர பல உதவிகளை செய்து வருகின்றனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் டெல்லியைச் சேர்ந்த 56 வயதான ராகேஷ் சவுத்ரி. டெல்லி காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்த கொரோனா நேரத்தில் மக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர், டெல்லியின் லோதி தகன மேடையில் கொரோனா காரணமாக உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்ய உதவி வருகிறார்.

கடந்த ஒரு மாதத்தில் 1,300 முதல் 1,400 உடல்களை தகனம் செய்ய உதவியாக இருந்துள்ளார் ராகேஷ் சவுத்ரி. கடந்த ஏப்ரல் 13ம் தேதி தகன மேடை அருகே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார் ராகேஷ். அப்போது தான் கொரோனா இரண்டாம் அலை டெல்லி நகரத்தில் உச்சம் பெறத் தொடங்கியது. அன்றிலிருந்து பணிநேரம் போக தகன மேடையில் உதவிகரமாக இருந்து வருகிறார். இது தொடர்பாக ராகேஷ் பேசுகையில், "ஒவ்வொரு நாளும் 20 - 30 சடலங்களை நாங்கள் இங்கு தகனம் செய்ய உதவுகிறோம்.

பல நேரங்களில் சடலங்களுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவார். சில நேரங்களில் உறவினர்கள் அதிகமாக வந்தாலும் அவர்கள் இறந்தவர்களின் சடலங்களை தொட விரும்புவதில்லை. அவர்கள் வாகன நிறுத்துமிடத்திலோ அல்லது சாலையிலோ உட்கார்ந்துகொள்கிறார்கள், நாங்கள் உடலை எடுத்துச் சென்று தகனத்திற்கு உதவுகிறோம். கடந்த ஒரு மாதத்தில் 1,300-1,400 உடல்களை தகனம் செய்ய உதவியிருக்கிறோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தகன மேடையில் உதவி செய்வதன் காரணமாக காவலர் ராகேஷ் வீட்டிற்கு செல்ல முடிவதில்லை. இதன்காரணமாக டெல்லியின் நிஜாமுதீன் காவல் நிலையத்திலேயே தற்காலிகமாக தங்கி வருகிறார். ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை காவல்நிலையம், தகன மேடை என பணி புரிகிறார்.

இதுதொடர்பாக மேலும் பேசியுள்ள அவர், "நான் எனது குடும்ப உறுப்பினர்களுடன் தினமும் வீடியோ காலில் தான் பேசி வருகிறேன். அவர்கள் மிகவும் ஆதரவாக உள்ளனர். அவர்கள் என்னிடம் சொல்லும் ஒரே விஷயம் ‘பாதுகாப்பாக இருங்கள், நீங்கள் தற்போது செய்து வருவதைத் தொடருங்கள்’ என்பது தான். அதனால் துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுவது எனது கடமை என்று நான் உணர்கிறேன்" என்றுள்ளார்.

டெல்லி காவல்துறையில் ஏஎஸ்ஐயாக இருக்கும் ராகேஷ் சவுத்ரி குடும்பத்தில் அவரது வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் அவரது மகளின் திருமணம் இந்த மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதுள்ள சூழலில் திருமணம் நடத்துவது அழகல்ல எனக் கூறி திருமணத்தை ஒத்திவைத்துள்ளது அவர்களது குடும்பம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com