குழந்தைக் கடத்தல் வதந்திகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்? - அதிர்ச்சி ரிப்போர்ட் !
குழந்தைகள் கடத்தப்படுவதாகக் கூறி அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசின் ரிப்போர்ட் ஒன்று அதற்கான காரணத்தை கூறுகின்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைக் கடத்த வந்ததாகக் கூறி வயதான மூதாட்டி ஒருவர் அடித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் எல்லோரையும் ஒரு நிமிடம் அதிர வைத்துவிட்டது. சென்னையில் இருந்து தமது சொந்த ஊர்க் கோயிலுக்கு சென்ற அந்த மூதாட்டி குழந்தைக்கு ஆசையாக சக்லெட் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளாகியுள்ளார். ஒரு வதந்தி என்னவெல்லாம் செய்யும் என்பதை இது புரிய வைத்தது. அதேபோல், தமிழகத்தின் சில இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
தமிழகத்தில்தான் இப்படி நடக்கிறது என்று பார்த்தால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்று பல சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. குழந்தை கடந்த வந்ததாகக் கூறி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 20-க்கும் அதிகமானோர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கடந்த ஜூலை 1ம் தேதி துலே மாவட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதனால், இது மாநில அரசுகளோடு மட்டுமல்லாமல், மத்திய அரசுக்கும் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகமும் சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளால் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு நிற்காமல் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு இதுபோன்ற சம்பவங்களை சுட்டிக் காட்டி வரைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.
இப்படியிருக்கையில் இது ஏதோ சிலர் பரப்பும் வதந்திகளால் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழவில்லை. மக்கள் மத்தியிலும் குழந்தைகள் கடத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளதே இதற்கு காரணம் என்று மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2017-18 ஆம் ஆண்டின் ஆய்வு அறிக்கைப்படி 2016ம் ஆண்டில் சுமார் 54,723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், இதில் 40.4 சதவீதம் வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குழந்தை கடத்தல் மற்றும் காணாமல் போவது போன்ற வழக்குகளில் 22.7 சதவீதம் கொடூரமான குற்றங்கள் நிகழ்கின்றன.
2015ம் ஆண்டு 41,893 மற்றும் 2014ம் ஆண்டு 37,854 சம்பவங்களும் நடந்துள்ளன. 2017 ஆம் ஆண்டிற்காக குழந்தைகள் கடத்தல் சம்பவங்களின் கணக்குகள் இன்னும் கணிக்கிடப்படவில்லை. 2014 மற்றும் 15 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2016ம் ஆண்டு 30 சதவீதம் குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
2016ம் ஆண்டு மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 1,06,958 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2015 ஆம் ஆண்டு 94,172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது 2015 உடன் ஒப்பிடும் போது 2016ம் ஆண்டில் 13.6 சதவீதம் வழக்குகள் அதிகரித்துள்ளன. 2016ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கு 24 குழந்தைகள் குற்றச் செயல்களுக்கு ஆட்படுகின்றனர்
குழந்தைக் கடத்தல் தொடர்பாக பரவும் வதந்திகள் குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “சமீப காலமாக குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் உலாவும் வதந்திகள் மூலம் பலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மக்கள் மத்தியில் குழந்தைகள் கடத்தப்படுவதாக அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் இது அதிகமாக காணப்படுகிறது. இவை முற்றிலும் ஆதாரமற்றவை” என்றார்.