கனமழை, பெருவெள்ளத்தால் ஸ்தம்பித்து நிற்கும் இமாச்சல பிரதேசம்..
கனமழை, பெருவெள்ளத்தால் ஸ்தம்பித்து நிற்கும் இமாச்சல பிரதேசம்..PT - News

கனமழை, பெருவெள்ளத்தால் ஸ்தம்பித்து நிற்கும் இமாச்சல பிரதேசம்.. 536 சாலைகள் மூடல்!

பல மாவட்டங்களில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

இமாச்சல பிரதேசத்தில் கனமழை, வெள்ளம் காரணமாக, பல அரசுக் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. காங்க்ரா மாவட்டத்தில் பொழிந்த தொடர் கனமழையால் ரவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கிராமங்களை இணைக்கும் 2 பாலங்களும், அரசுக் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்துவரும் மழையால் பல்வேறு பகுதிகளில் மலைச்சரிவு காரணமாக சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாநிலம் முழுவதும் 11 மாவட்டங்களில் 536 சாலைகள் மூடப்பட்டுள்ளன. குலு - மணாலி தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அங்குள்ள சுங்கச்சாவடியையும் வெள்ளநீர் புகுந்து மூழ்கடித்தது.

இமாச்சல பிரதேசம் - கனமழையால் சரியும் வீடுகள்
இமாச்சல பிரதேசம் - கனமழையால் சரியும் வீடுகள்PT - NEWS

காங்க்ரா மாவட்டத்தில் உள்ள ராவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கிராமங்களை இணைக்கும் 2 பாலங்கள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. இதேபோல, பழைய மணாலியை இணைக்கும் பாலங்கள், பட்லிகுஹல், துண்டி, பஹாங் பகுதியில் உள்ள பாலங்களும் அடியோடு பெயர்ந்து ஆற்றில் மூழ்கின.

ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பினால் சாலைகள் மட்டுமல்லாமல் அடுக்குமாடி குடியிருப்புகளும், அரசு கட்டடங்களும்கூட சீட்டுக்கட்டுகளைப்போல வெள்ளத்தில் சரிந்தன. பல மாவட்டங்களில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சேதமாகும் வீடுகள் - இமாச்சல பிரதேசம்
வெள்ளத்தில் சேதமாகும் வீடுகள் - இமாச்சல பிரதேசம் PT- News

லாஹுல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள டிம்ஃபுக் கிராமத்தில் உள்ள மலைப்பகுதி திடீரெனச் சரிந்து விழுந்தது. சத்தம்கேட்டு உடனடியாக கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. யூகிக்க முடியாத இந்த தொடர் கனமழை, பெரு வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க அம்மாநில அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com