50 கொடூர கொலைகள்... பிடிப்பட்ட DR DEATH.. பின்னணி என்ன?
50 கொடூர கொலைகளுக்கு காரணமான சீரியல் கில்லராக அறியப்படும் DR DEATH கடந்த ஆண்டு சிறையிலிருந்து தப்பித்தநிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அலிகாரைச் சேர்ந்தவர் 67 வயதான ஆயுர்வேத மருத்துவரான சர்மா. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர், ராஜஸ்தான், பண்டிகுயில் தேவேந்தர் சர்மா ஒரு கிளினிக்கை நிறுவி 11 ஆண்டுகள் மருத்துவ பயிற்சி பெற்றுள்ளார்.
இதனையடுத்து, எரிவாயு விற்பனை நிலைய ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட அது தோல்வியடைந்ததில் பெரும் நிதி இழப்பு ஏற்பட்ட பிறகு சர்மா குற்றச் செயல்களில் ஈடுபட்டார்.
1994 ஆம் ஆண்டு, விற்பனை நிலையத்தைப் பெறுவதற்காக ஒரு நிறுவனத்தில் ரூ.11 லட்சத்தை முதலீடு செய்தார். ஒரு வருடம் கழித்து, அவர் ஒரு போலி எரிவாயு நிறுவனத்தைத் தொடங்கி சட்டவிரோத உறுப்பு வர்த்தகத்திலும் ஈடுபட்டார். இவர் 2002 - 2004 க்கு இடையில் பல டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களைக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார். போலியாக கார், லாரி போன்ற வாகனங்களை புக் செய்து, ஓட்டுநர்களை கொன்று அவர்களின் வாகனத்தை சந்தையில் விற்கும் கொடூரச் செயலை செய்து வந்திருக்கிறார்.
கொல்லப்பட்டவர்களின் உடலை உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்சில் உள்ள ஹசாரா கால்வாயில் இருக்கும் முதலைகளுக்கு உணவாக போட்டிருக்கிறார். திருடப்பட்ட ஒவ்வொன்றும் ரூ. 20,000 முதல் ரூ. 25000 வரை சம்பால் சந்தனையில் விற்கப்பட்டுள்ளன. இவர் மீது கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை என 27 வழக்குகள் இருக்கிறது. டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா முழுவதும் ஏழு தனித்தனி வழக்குகளில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் குர்கான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையும் விதித்துள்ளது.
இப்படி 21 டாக்ஸி ஓட்டுநர்களைக் கொலை செய்ததாக சர்மா கைது செய்யப்பட்டநிலையில், பிறகு 50 க்கும் மேற்பட்டவர்களை தான் கொன்றதாக அவரே ஒப்புக்கொண்டதாக போலிசார் தெரிவிக்கின்றன.
அது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. இவர் டாக்டர் டெத் என்ற பெயரில்தான் அடையாளப்படுத்தப்படுகிறார்.
மேலும், 1998 - 2004 க்கு இடைப்பட்ட காலத்தில் சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடியில் ஈடுபட்டதாகவும், டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் முழுவதும் 125க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மற்றொரு டாக்டர் மற்றும் பிற இடைத்தரகர்களின் உதவியுடன் செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஒரு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை சம்பாதித்ததாக அவரே போலீஸில் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 2023-ல் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தபோது பரோலில் வெளியே வந்தார். அப்போது காவல்துறையிடமிருந்து தப்பிவிட்டார். அவரை காவல்துறை தேடி வந்தது. இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் இருக்கும் ஆசிரமத்தில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தநிலையில், திங்கள் கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளார்.