குஜராத், ராஜஸ்தான் உள்பட 4 மாநிலங்களில் கனமழை - 50 பேர் உயிரிழப்பு
குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், பருவம் தவறி பெய்த மழை மற்றும் புழுதிக்காற்றுக்கு 50 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நேற்றிரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அத்துடன் புழுதிக் காற்றும் சேர்ந்து வீசியதால் கடும் சேதம் ஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 21 பேரும், மத்திய பிரதேசத்தில் 15 பேரும் உயிரிழந்தனர்.
குஜராத்தில் பத்து பேரும், மகாராஷ்ட்ராவில் மூன்று பேரும் உயிரிழந்தனர். இயற்கை சீற்றம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரி்வித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மழையால் உயரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்திருக்கிறார். பிரதமரின் கண்களுக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத் மட்டுமே தெரிவதாக மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் குறை கூறியிருந்த நிலையில், மோடி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.