தெலங்கானா: தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

தெலங்கானா: தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு!
தெலங்கானா: தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தெருநாய்கள் சூழ்ந்துக்கொண்டு கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்த கங்காதர், வேலை நிமித்தமாக ஹைதராபாத் நகரில் பாக் ஆம்பர்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஆம்பர்பேட்டையில் உள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வரும் கங்காதர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பணிக்கு சென்றுள்ளார்.

அதில் அவரது 5 வயது மகன் பிரதீப் அங்கிருந்த ஆட்டோமொபைல்ஸ் கடை அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அவனைச் சூழ்ந்த 3 தெரு நாய்கள் கீழே தள்ளி கடித்துக் குதறியது. எனினும், நாய்கள் இடமிருந்து சிறுவன் பிரதீப் தப்பிக்க முயன்றபோது, விடாமல் தெரு நாய்கள் துரத்தி, துரத்தி சிறுவனை கடித்து குதறியது. 3 தெரு நாய்களுடன், அங்கு ஓடிவந்த மற்றொரு நாயும் சேர்ந்து கடித்துக் குதறியதில் சிறுவன் படுகாயமடைந்தார்.

பின்னர் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்க சென்றபோது, தெரு நாய்கள் கடித்ததில் வயிற்றில் அதிக காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். சிறுவன் பிரதீப்பை தெரு நாய்கள் கடித்துக் குதறிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதறவைத்துள்ளது. தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் இறக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுவன் பிரதீப் பலியான சம்பவத்திற்கு ஒரு நாட்கள் முன்னர்தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தெருநாய்கள் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்தான். இதேபோல், ஹைதராபாத்தில் கடந்த ஜனவரி மாதம் உணவு டெலிவரி செய்ய சென்ற ஸ்விக்கி டெலிவரி பாய், அங்கு இருந்த நாய் ஒன்றிடம் இருந்து தப்பிக்க அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததில் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com