சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ஊர்வலம், மிதிவண்டி பேரணி நடத்த பிப்ரவரி 11ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கிடையே உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில், பிப்ரவரி 11ஆம் தேதி வரை பேரணி, ஊர்வலங்களுக்கான தடையை நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பரப்புரை கூட்டங்களில் 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியாளர்களை தவிர்த்து, கட்சியினர் 20 பேர் வரை வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கலாம். உள் அரங்க பரப்புரைகளில் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

