நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - சத்தீஷ்கரில் 5 பேர் பலி

நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - சத்தீஷ்கரில் 5 பேர் பலி
நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - சத்தீஷ்கரில் 5 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து மீது நக்சலைட்டுகள் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில், பாதுகாப்புப் படை வீரர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 

சத்தீஷ்கர் மாநிலத்தில், நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் குழுவினர் சமீபத்தில் அங்கு சென்றனர். அப்போது, தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ உட்பட 3 போலீசார் கொல்லப்பட்டனர். தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், பத்திரிகையாளரை கொல்வது எங்கள் நோக்கமல்ல, பத்திரிகையாளர்கள் போலிசாருடன் வர வேண்டாம் என்று நக்சலைட்டுகள் தரப்பில் கடிதம் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், தாண்டேவாடாவின் பசெலி என்ற இடத்தில் பேருந்து மீது வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களை குறிவைத்து நக்சலைட்டுகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 

பேருந்தின் டிரைவர், நடத்துநர், கிளீனர் ஆகிய மூவரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேர் உயிரிழந்து 8 நாட்கள் ஆன நிலையில், தற்போது இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் வீரர்கள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி, ராகுல் காந்தி இருவரும் நாளை சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜக்டல்பூல் பகுதியில்தான் நாளை பிரதமர் பிரச்சாரம் செய்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com