குஜராத்: இளம் பெண்ணுடன் அமர்ந்திருந்த பட்டியலின இளைஞர் மீது சரமாரி தாக்குதல்-நடந்தது என்ன?

குஜராத்: இளம் பெண்ணுடன் அமர்ந்திருந்த பட்டியலின இளைஞர் மீது சரமாரி தாக்குதல்-நடந்தது என்ன?
குஜராத்: இளம் பெண்ணுடன் அமர்ந்திருந்த பட்டியலின இளைஞர் மீது சரமாரி தாக்குதல்-நடந்தது என்ன?

குஜராத்தில் ஆதிக்க சமூக பெண்ணுடன் ஒன்றாக அமர்ந்து பேசிய பட்டியலின இளைஞரை சரமாரியாக அடித்து தாக்கிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் வடடோராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுடன் அமர்ந்திருந்த அல்பேஷ் பார்மர்(24) என்ற இளைஞரை 7 பேர்கொண்ட கொண்ட கும்பல் பெல்ட் மற்றும் குச்சியால் அடித்து தாக்கிய அந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலானது.

டிசம்பர் 11ஆம் தேதி மதியம் 3.30 மணியளவில் பைலி-சேவாசி சாலையில் நர்மதா கால்வாய் அருகே, அல்பேஷ் குமார் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது குச்சிகள் மற்றும் பெல்ட்டுகளுடன் அங்குவந்த 7 பேர் கொண்ட கும்பல் அல்பேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சமூக ஊடகங்களில் அல்பேஷ் தகாத கமெண்டுகளை தங்கள் அக்கவுண்டில் பதிவிட்டதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் வாய்த்தகராறில் சாதிப் பிரச்னையை இழுத்ததுடன், அல்பேஷை அடித்து தாக்கியுள்ளனர். இதில் தலை, கை, கால்கள் மற்றும் முதுகில் பலத்த அடிபட்ட அல்பேஷை போலீசாரிடம் சென்றால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அல்பேஷின் சமூகத்தினர் போலீசாரிடம் புகாரளிக்கும்படி, அவரை வற்புறுத்தியதில், புதன்கிழமை போலீசில் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரின்பேரில் போலீசார் 5 பேரை கைதுசெய்துள்ளனர்.

இதனிடையே, அந்த பெண்ணை அல்பேஷ் பின் தொடர்ந்து வந்ததன் காரணமாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். அதாவது, பெண் தோழி சமூக ஊடகங்களில் பிரபலமானவர் என்றும், அவருடைய பதிவுகளில் தகாத கமெண்டுகளை பதிவிட்டதால் கமெண்ட் செக்‌ஷனிலேயே  வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். இதன் அடிப்படையிலும் அதன் உண்மைத்தன்மை குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பட்டியலின செயற்பாட்டாளரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ஜிக்னேஷ் மேவானியும் கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான அரசின் மெத்தனமான செயல்பாடே இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com