கர்நாடகா | ஹனிடிராப் விவகாரத்தால் வீசும் புயல்; சபாநாயகர் முன்பு கிழித்தெறியப்பட்ட காகிதங்கள்!
செய்தியாளர் : ஜெகன்நாத்
பெண்கள் மூலம் வலைவிரித்து மிரட்டும் ஹனிடிராப் விவகாரம், கர்நாடக அரசியலில் புயலை கிளப்பிக்கொண்டிருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவையிலும் இந்த பிரச்னையை எழுப்பிய பாஜக எம்எல்ஏக்கள், சபாநாயகர் முன்பு காகிதங்களை கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக ஹனிடிராப் விவகாரத்தால் அரசியல் களத்தில் அனல் பறந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், வியாழனன்று, சட்டசபையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, மாநில, தேசிய அளவிலான அரசியல்வாதிகள் 48 பேரின் முக்கிய விஷயங்கள் அடங்கிய பென் ட்ரைவ் உள்ளதாக தெரிவித்தார். இதனை தயாரித்தது யார் என்ற உண்மை தெரியவேண்டும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் சித்தராமையாக பதிலளித்துக் கொண்டிருந்தபோது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார், ஹனி டிராப் வழக்கு தொடர்பாக விளக்கம் கோரினார்.
ஆனால் முதல்வர் சித்தராமையா எழுதி கொடுப்பதாகக் கூறினார். ஆனால் உடடினயாக பதிலளிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் சித்தராமையா பொறுமை இழந்து, பாஜக எம்எல்ஏக்களிடம் ஆவேசப்பட்டார்.
பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனை மீறி இஸ்லாமியர் இடஒதுக்கீடு தொடர்பான விவாதத்திற்குச் சென்ற நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் மசோதா நகல்களை கிழித்து சபாநாயகர் மீது வீசி முழக்கங்கள் எழுப்பினர். முதலமைச்சர் சித்தராமையா மீதும் காகித துண்டுகளை வீசினர். இதையடுத்து பாஜக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மாறிமாறி காகித துண்டுகளை வீசிக்கொண்டனர். அவையில் பாஜக உறுப்பினர்கள் சிடியை காட்டி தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார். இதற்கிடையே சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதற்காக 18 பாஜக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த சபாநாயகர், அவர்கள் ஆறு மாத காலம் அவைக்கு வர தடை விதித்து உத்தரவிட்டார்.