"போதைப் பயிர்களை பயிரிட அனுமதிக்க வேண்டும்" - நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் கோரிக்கை
போதைப் பயிர்களை விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என நேபாள நாட்டைச் சேர்ந்த 46 எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 1973-ஆம் ஆண்டு முதல், போதைப் பயிர்களை பயிரிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் போதைப் பயிர்களை விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
அதில், போதைப் பயிர்களை விவசாயம் செய்வதற்கு அனுமதி அளித்தால் நாட்டின் பொருளாதாரம் வளருவதோடு, மக்களின் வாழ்வாதாரமும் உயரும் எனதெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், வெளிநாட்டில் இருந்து மதுபானங்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், “போதைப் பயிர்கள் பல வகைகளில் பயன்படுகின்றன. வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கவும், சில மருந்துகள் தயாரிக்கவும் உதவுகின்றன. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 65 நாடுகள் 1970ல் போதைப்பயிர்களை தடை செய்தன. ஆனால் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.