மேகாலயா சுரங்க விபத்து: 42 நாட்களுக்குப் பிறகு முதல் உடல் மீட்பு
மேகாலயா மாநில சுரங்க விபத்தில், 42 நாட்களுக்குப் பிறகு ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
மேகாலயாவில் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. கைவிடப்பட்ட சில சட்ட விரோத சுரங் கங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள சான் கிராமத்தில், கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்று சட்ட விரோதமாக செயல்பட்டு வந்தது. ’எலி வளை’ சுரங்கம் என்று சொல்லப்படுகிற இந்தச் சுரங்கத்துக்குள் மழை காரணமாக, அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. இதனால் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 13 பேர் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு படை, கடற்படை வீரர்கள் முகாமிட்டு அவர்களை மீட்கும் முயற்சி களை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீரை வெளியேற்றும் பணியில் சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. பல லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியும் முன்னேற்றம் இல்லை.
இந்நிலையில், நீருக்கடியில் சென்று தேடும் ரோபோ (Underwater ROV)மூலம் தேடுதல் நடந்தது. அப்போது எலிவளை சுரங்கத் தின் வாயிலில் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வெளியே மீட்கும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடும் போராட்டத்துக்குப் பிறகு, நேற்று அந்த உடல் மீட்கப்பட்டது. உடல் மிகவும் சிதைந்து போய் உள்ளது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 3 பேர் மட்டும் உள்ளூர்வாசிகள் என்றும் மற்றவர்கள் அஸ்ஸாமை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. உடலை அடையாளம் காண உறவினர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.