அசாம் 'குழந்தை திருமணம்' விவகாரம்: குறிவைக்கப்படுகிறார்களா வங்காள முஸ்லீம்கள்?

அசாம் 'குழந்தை திருமணம்' விவகாரம்: குறிவைக்கப்படுகிறார்களா வங்காள முஸ்லீம்கள்?
அசாம் 'குழந்தை திருமணம்' விவகாரம்: குறிவைக்கப்படுகிறார்களா வங்காள முஸ்லீம்கள்?

அசாமில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குழந்தை திருமணம் தொடர்பாக 4,135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் முக்கியமான சமுதாய பிரச்சினைகளில் ஒன்று குழந்தை திருமணம். குறிப்பாக வடகிழக்கு மாநிலமான அசாமில், சிறுமிகளை பருவம் அடைந்தவுடன் திருமணம் செய்து வைக்கும் கொடுமை நீண்ட காலமாக அரங்கேறி வருகிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக கடந்த ஜனவரி 23-ம் தேதி நடைபெற்ற அசாம் அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது குழந்தை திருமணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 2-ம் தேதி வெளியிட்டார்.

அதன்படி, “அசாமில் வரும் 2026-ம் ஆண்டுக்குள் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ளோம். 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். 14 வயது முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் அனுதாபத்துக்கு இடமில்லை’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குழந்தை திருமணம் தொடர்பாக 4,135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2,763 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அசாமில் குழந்தை திருமணத்திற்கு எதிரான அடக்குமுறையில் கணவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், இப்போது சம்பந்தப்பட்டவர்கள் குழப்பத்தில் சிக்கியுள்ளனர். கணவரின் அரவணைப்பில் இருந்த பலரும், தற்போது தாங்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான மோமினா காதுன் (குழந்தை திருமணமானவர்) என்பவர் பேசுகையில், “எனக்கு 8 வயதாக இருந்தபோது எனது தந்தை மறுமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு அம்மாவும் கைவிட, ஒரு சிறிய கிராமத்தில் எனது தந்தைவழி அத்தையுடன் வாழ்ந்து வந்தேன். அங்கு வாழ்க்கை கடினமாக இருந்தது. நான் அவர்களது குடும்பத்திற்கு ஒரு சுமையாக இருந்தேன். கடந்த ஆண்டு எனது அத்தையின் குடும்பத்தினர், எனக்கு 17 வயதில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது நான் பயத்தில் மயக்கமடைந்து விழுந்தேன்.

திருமணம் செய்து கொள்ளும் ஆண்தான், நமது வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பார் என எங்களுக்கு எப்போதும் கூறப்பட்டது. நான் இளமையாக இருந்ததுடன், என் கணவர் ஒரு மோசமான நபராக இருந்தால், என்ன நடக்கும் என்றும் கவலைப்பட்டேன். ஆனால், நான் திருமணம் செய்து கொண்ட விவசாயியான யாகூப் அலி, எனது தனிமையை அகற்றி, உண்மையான அன்பையும், பாசத்தையும் கொடுத்து கனிவான மனிதராக நடந்து கொண்டார். நாங்கள் ஏழைகளாக இருந்தபோதும், குறைந்தபட்சம் அமைதியுடன் இருந்தோம். எங்களது மகிழ்ச்சி சிறிது காலமே நீடித்தது. பிப்ரவரி 4-ம் தேதி மைனராக இருந்தபோது என்னை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, வீட்டிலிருந்த எனது கணவர் கைது செய்யப்பட்டார். தற்போது 22 வயதான எனது கணவர் காவலில் இருக்கிறார். கைது செய்யப்பட்டதிலிருந்து எனது கணவரை சந்திக்க முடியவில்லை. நான் எங்கே போவது? எனக்கு யாரும் இல்லை. நானும் என் குழந்தையும் பசியுடனும், தனிமையுடனும் இறந்துவிடுவோம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் துன்பம் எப்போதுதான் முடியும்?” என்றார்.

குழந்தை திருமண வழக்குகள் தொடர்பாக கணவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, திருமதி.காதுன் போன்ற நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புகார் பட்டியலில் திருமணச் சடங்குகளைச் செய்த மாப்பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் பூசாரிகள் உட்பட இதுவரை 8,100-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம், அரசு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய ஒரு கொடூரமான குறுக்கீடாகவே பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஆண்களே தங்கள் குடும்பங்களுக்கு முதன்மையாக உணவளிக்கிறார்கள் என்றும், பிழைப்பதற்கு அவர்களையே நம்பியிருப்பதாகவும் பெண்கள் கூறுகின்றனர். இந்நிலையில் காவல் நிலையங்களுக்கு வெளியே பெண்கள் புலம்பும், தரையில் உருளும் வீடியோக்கள் ஆகியவை சமூக ஊடகங்களில் பரவி கோபத்தைத் தூண்டிவிட்டுள்ளன.

திரு.அலி போன்றவர்கள் 14-18 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்கள் மீது குழந்தை திருமணத்தை தடை செய்யும் சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ஆனால், 14 வயதிற்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் மிகவும் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்கீழ் அவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக, 7 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

நூற்றுக்கணக்கான இந்து ஆண்களும் கைது செய்யப்பட்டிருந்தாலும், அசாமில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் மற்றவர்களை விட அதிகமான கைதுகளைக் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ், பெண்கள் பருவமடைந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கும், 18 வயதுக்குட்பட்ட பெண்களின் அனைத்துத் திருமணங்களையும் தடை செய்யும் இந்தியாவின் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. டாக்டர் அர்க்யா சென்குப்தாவின் கருத்துப்படி, “எந்தவொரு மதத்தின் பொதுவான தனிப்பட்ட சட்டங்களையும், சிறப்புச் சட்டங்கள் புறக்கணிக்கும் என்பதற்கு ஒரு முன்மாதிரி உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் சூழ்நிலையைப் பொறுத்து கடைபிடிக்கப்பட்ட அநியாயத்தையும் காரணியாக காண வேண்டும். முஸ்லீம்களின் தனிப்பட்ட சட்டமானது, பல தசாப்தங்களாக தங்கள் சொந்த விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள பருவமடைந்த பெண்களை அனுமதித்துள்ளது. எனவே திடீரென்று அவர்களது கணவர்களை சிறையில் தள்ளுவது என்பது ஒரு நடைமுறை நியாயமற்றதாக இருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது அரசாங்கம் குழந்தை திருமணத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டு வருவதாகவும், எந்த ஒரு சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த கைது நடவடிக்கையானது சிறுபான்மையினரை, குறிப்பாக வங்காள மொழி பேசும் முஸ்லீம்களை ஓரங்கட்டுவதற்கான மாநில பாரதிய ஜனதா அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சியே என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.இவர்கள் ஒரு காலத்தில் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த, தற்போதைய பங்களாதேஷில் இருந்து இடம்பெயர்ந்த சமூகம். பல இனங்கள் கொண்ட அசாம் மாநிலத்தில், நீண்ட காலமாக வங்காள மொழி பேசும் முஸ்லீம்கள் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். இங்கு மொழி அடையாளமும், குடியுரிமையும் மிகப்பெரிய அரசியல் தவறுகளாக உள்ளன. தேசிய அளவில் ஆட்சியில் இருக்கும் இந்து-தேசியவாத பிஜேபி அரசாங்கம், சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் உட்பட பல கொள்கைகளை அறிவித்துள்ளது. இவை குறிப்பாக வங்காள மொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த கைதுகள் சட்டவிரோத திருமணங்கள் பிறருக்கு தெரியாமல் மறைக்கப்படுவதற்கும், அவற்றுக்கு எதிராக புகாரளிப்பதை கடினமாக்கவும் காரணிகளாக அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஆம்ஸ்டர்டாமில் உள்ள வ்ரிஜே பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் அப்துல் ஆசாத் பேசுகையில், "குழந்தைத் திருமணங்கள் ஒரு மதத்தின் பெயரல் நிகழ்த்தப்படும் சமூக அவலத்தை விட மோசமானது. இவை வறுமை மற்றும் ஆணாதிக்கத்தில் வேரூன்றியுள்ளன. சமூக, பொருளாதார மேம்பாட்டின் மூலம் மட்டுமே இந்த நடைமுறையை உண்மையாக ஒழிக்க முடியும். அதனைவிடுத்து வெளிப்படையாக ஒரு சமூகத்தை குறிவைப்பதன் மூலம் அல்ல” என்றார்.

சட்டத்திற்கு புறம்பாக இருக்கும்போதும், இந்தியாவின் பல பகுதிகளில் ஆணாதிக்க பழக்கவழக்கங்கள், கல்வியின்மை மற்றும் வறுமை காரணமாக  குழந்தை திருமணம் பரவலாக உள்ளது. இதுதொடர்பாக மிகக் குறைவான வழக்குகளே உண்மையில் பதிவாகியுள்ளன. அசாமில், 2021-ம் ஆண்டில் 155 குழந்தை திருமண வழக்குகளும், 2020-ம் ஆண்டில் 138 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய குழந்தைத் திருமண ஒடுக்குமுறையானது ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அசாமில் அதிகரித்து வரும் குறைந்த வயது கர்ப்ப விகிதம் குறித்த எச்சரிக்கையை வெளிப்படுத்தியதுடன், பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் முதலமைச்சர் உறுதியளித்தார். இந்த திடீர் நடவடிக்கை பல குடும்பங்களை சிதைத்துள்ளது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அசாமின் துப்ரி மாவட்டத்தில் வசிக்கும் கலிதுல் ரஷீத் பேசுகையில், “எனது 23 வயது மகள் குல்சூம் கான், பிப்ரவரி 4-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவளே எனது குழந்தைகள் நான்கு பேரில் மூத்தவள். குல்சூம் 14 வயதில் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டில், அவரது கணவர் கொரோனா காரணமாக இறந்தபோது, குல்சூம் தனது 2 குழந்தைகளுடன் எங்களது வீட்டிற்குத் திரும்பினார். அவள் வாழ்க்கையில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற கைது சம்பவத்தைப் பற்றிக் கேட்டபோது, அவள் மிகவும் பதற்றமடைந்தாள். அவள் என்னிடத்தில் திருமணச் சான்றிதழைக் கேட்டாள். அவளுடைய கணவர் இறந்துவிட்டதால், கவலைப்பட ஒன்றுமில்லை என நான் அவளிடம் சொன்னேன். இருப்பினும் குல்சூம், எங்கே எங்களை கைது செய்து விடுவார்களோ என்று பயந்தார். எனவே எங்களை பாதுகாப்பதற்காக, அவள் தற்கொலை செய்து கொண்டாள்” என்றார்.

டாக்டர் கலாம் பேசுகையில், “அசாமில் பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் விளிம்புநிலை சமூகத்தினரிடையே நிகழ்கின்றன. இந்த நடைமுறைக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த சமூக இயக்கம் சமீபத்திய ஆண்டுகளில் வடிவம் பெற்றுள்ளது. இப்போது அரசாங்கத்தின் "ஆக்கிரமிப்பு அணுகுமுறை", இந்த இயக்கத்தை பலவீனப்படுத்தும். நமது சமூகம் மிகவும் பிளவுபட்டுள்ளது. குழந்தை திருமணம் போன்ற கொடூரமான செயல்கள் ஆதரவைப் பெறுகின்றன" என்றார்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான துப்ரியில்தான் அதிக எண்ணிக்கையிலான கைதுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மதிப்பீட்டை எட்டு பெண் எதிர்ப்பாளர்கள் சார்பாக போராடும், துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மசூத் ஜமான் ஏற்றுக்கொள்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "குழந்தை திருமணம் என்பது முஸ்லீம் சமூகத்தின் பிரச்னை என்பது பொதுவான கருத்து. ஆனால், குழந்தை திருமணங்கள் துப்ரியில் அதிகமாக உள்ளது. ஏனெனில் இது அசாமின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு பெரும்பாலான குடும்பங்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். முஸ்லிம்கள் இங்கு வசிப்பதால் அல்ல. பெண்களின் உயிரைப் பணயம் வைத்து, சமூகப் பிரச்சினையை வகுப்புவாதப் பிரச்சினையாக அரசாங்கம் மாற்றுகிறது. சமீபத்திய கைதுகளில் இந்து மற்றும் முஸ்லீம் ஆண்கள் இருவரும் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்நிலையில் ஜாமீன் வழங்குவதில் பாகுபாடு காணப்படுகிறது. முக்கியமாக பழங்குடியின சமூகங்கள் வசிக்கும் மஜூலியில், 24 பேருக்கு ஒரே நாளில் ஜாமீன் கிடைத்தது. அதே போன்று குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம் ஆண்கள் சார்பாக நாங்கள் வாதிட்டபோதும், ஜாமீன் பெற முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவர்களின் துயரத்தைப் போக்க முடியும் என்று நினைப்பது உணர்ச்சியற்றது. மனைவிக்கும், அவள் கணவனுக்கும் இடையே உள்ள உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புக்கு அரசாங்கம் எவ்வாறு ஈடுசெய்யும்?"என்றார்.

தற்போது சிறையிலிருக்கும் தனது கணவரை எதிர்பார்த்து காத்திருக்கும், 7 மாத கர்ப்பிணி திருமதி.காதுன் போன்றவர்களை ஆட்டிப் படைக்கும் கேள்வியும் இதுவே!

- ராஜா

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com