நாடு முழுவதும் தினந்தோறும் சாலை விபத்துகளில் சுமார் 400 பேர் உயிரிழக்கின்றனர். அதில், 46 சதவீதம் பேர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “சாலை விபத்து கடந்த ஆண்டு 4.1 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 3.2 சதவீதம் குறைந்துள்ளது. சாலை விபத்துகளில் பலியானவர்களில் 18 வயது முதல் 60 வரையிலானோர் 83.3 சதவீதம் பேர். இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 4,80,652 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. அதில், 1,50,785 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமல்ல மாநில மற்றும் மாவட்ட சாலைகளில் நடைபெறும் உயிரிழப்புகளை குறைக்க பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சாலை விபத்து நிகழும் இடங்களில் உடனடி வசதிகளை வழங்க மத்திய அரசின் சாலை நிதியை பயன்படுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்” என்று நிதின் கட்கரி கூறினார்.