தெலங்கானா | 8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்! உடந்தையாக மனைவி?
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள நந்திகமாவில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்குத் தகவல் கிடைத்த நிலையில், அங்குச் சென்று விசாரித்துள்ளனர். மேலும், காவல் துறையினரிடம் சமர்ப்பிக்கப்பட்ட காட்சிகளில், 8ஆம் வகுப்பு மாணவி மாலையை ஏந்தி 40 வயது நபருக்கு முன்னால் நிற்பதைக் காட்டியது. அவர்கள் பக்கத்தில் அந்த ஆணின் மனைவி என்று சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும், பாதிரியாரும் உள்ளனர். இதையடுத்து, இந்த திருமணச் சடங்குகளை ஏற்பாடு செய்ய உதவிய இடைத்தரகர், பாதிரியார், 40 வயது நபர், அவரது மனைவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் குழந்தைத் திருமணம் என்பது குழந்தைகளுக்கு எதிரான மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகும். கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் அறிக்கையின்படி, அதை ஒழிக்க 2006ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் என்ற சட்டம் இருந்தபோதிலும் இது சில மாநிலங்களில் பரவலாக உள்ளது. குழந்தைத் திருமணம் குழந்தைப் பருவத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது, மேலும் குழந்தைகளை வன்முறை, சுரண்டல் மற்றும் துஷ்பிரயேகத்திற்கு ஆளாக்குகிறது. இது அவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உரிமைகளையும் மோசமாகப் பாதிக்கிறது. குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வு பிரசாரம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் மாநிலங்களில் அசாமும் ஒன்றாகும். 2021-22 மற்றும் 2023-24க்கு இடையில் அசாமின் 20 மாவட்டங்களில் குழந்தைத் திருமண வழக்குகளில் 81 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளதாக இந்திய குழந்தைகள் பாதுகாப்பு ஜூலை 2024இல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.