இந்தியா
சைக்கிள் வாங்க வைத்திருந்தப் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த சிறுவன்
சைக்கிள் வாங்க வைத்திருந்தப் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த சிறுவன்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் தனது உண்டியல் சேமிப்பை கொரோனா நிவாரண நிதிக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.
இந்த உலகம் மனிதாபிமானத்தால் தாங்கி நிறுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பேரிடர் காலத்தின் போதுதான் மிக வெளிச்சமாக வெளியே தெரிய வருகிறது. கொரோனாவின் விபரீதம் என்ன என்றே அறிந்து கொள்ள முடியாத வயதில் உள்ள குழந்தைகள் தங்களின் உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்குகிறோம் என்று அரசு அதிகாரிகளைச் சந்தித்து வழங்கும்போது ஆச்சரியப்படாமல் எந்த மனிதரால் இருக்க முடியும் சொல்லுங்கள். அப்படி ஒரு நிகழ்வு ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் நடந்துள்ளது.
கடந்த 7 ஆம் தேதி அன்று 4 வயது சிறுவன் ஹேமந்த் தனது சேமிப்புத் தொகையான 971 ரூபாயை கொரோனாவுக்கு எதிரான போருக்கு தனது பங்களிப்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அள்ளிக் கொடுத்துள்ளார். அந்தத் தொகை மிகக் குறைவுதான். ஆனால் அந்தப் பணத்தைச் சேர்க்க இந்தச் சிறுவன் எத்தனை நாட்கள் போராடி இருப்பான்? ஆகவே அவனது மனதால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த நிதியை வழங்குவதற்காக ஹேமந்த், ததேபள்ளியில் கட்சி அலுவலகத்திலிருந்த போக்குவரத்து அமைச்சர் பெர்னி வெங்கடராமையாவை சந்தித்துள்ளார். அப்போது அமைச்சர் அந்தச் சிறுவனின் செயலைப் பாராட்டினார். மேலும் சைக்கிள் வாங்குவதற்காக மிச்சப்படுத்தி வைத்திருந்த இந்தப் பணத்தை வழங்கியதை ஊக்குவிப்பதற்காக விரைவில் தனது சொந்த செலவில் சைக்கிளை வாங்கி பரிசளிப்பேன் என்று சிறுவனிடம் அமைச்சர் உறுதியளித்தார்.