4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை தேர்தல் முடிவுகள்... ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?

4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாகவே இம்முடிவுகள் பார்க்கப்படுகின்றன.
வாக்குப்பதிவு
வாக்குப்பதிவுட்விட்டர்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.3) காலை தொடங்குகிறது. மிசோரமில் மட்டும் டிச.4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் இடையே பிரதான போட்டி நிலவுகிறது. தெலங்கானாவில் மட்டும் ஆளும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே பிரதான போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் சத்தீஸ்கரிலும் தெலங்கானாவிலும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் இழுபறி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமை பொறுத்தவரை ஆளும் மிசோ தேசிய முன்னணி, மிசோரம் மக்கள் இயக்கம் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

அடுத்தாண்டு ஏப்ரல், மே மாத வாக்கில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன.

சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்தான் என்றாலும் மத்தியில் மோடி ஆட்சி மீதான மக்களின் மன நிலையையும் இம்முடிவுகள் ஓரளவு பிரதிபலிக்கும் என கருதப்படுகிறது. இதில் கணிசமான வெற்றிகள் கிடைத்தால் 3ஆவது முறையாக மத்தியில் ஆட்சியமைப்பதற்கான நம்பிக்கையை அக்கட்சிக்கு தரும்.

அதேநேரம், 5 மாநிலங்களில் மூன்றில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்பட்சத்தில் மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்கான உத்வேகம் அக்கட்சிக்கு கிடைக்கும். மேலும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்பும் ஏற்படும்.

இதையும் படிக்க: ’அடுத்த பெண்ணைப் பார்ப்பியா..’ - அமெரிக்காவில் காதலனின் கண்ணில் ஊசியால் குத்திய காதலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com