விலை உயர்வு எதிரொலி.. நைஜரிலிருந்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் மும்பையில் பறிமுதல்!
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் அதை வெளிநாடுகளில் இருந்து கடத்திவரும் போக்கு அதிகரித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் அதை வெளிநாடுகளில் இருந்து கடத்திவரும் போக்கு அதிகரித்துள்ளது. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் 4 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விமான நிலைய ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தங்கம் ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டது. மும்பையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. கேரளாவிலும் விமான நிலையங்களில் கடத்தல் தங்கம் பிடிபடுவது கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது.
உடலுக்குள் மறைத்து எடுத்து வருவது, பொருட்களுக்குள் மறைத்து எடுத்து வருவது என பலவழிகளில் தங்கத்தை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கேரள விமான நிலையங்களில் இந்தாண்டில் மட்டும் 82 பேரிடம் இருந்து 40.6 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தங்கத்திற்கான இறக்குமதி வரியை அரசு 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைத்ததால் கடத்தலும் கணிசமாக குறைந்திருந்தது. இப்போது விலை அதிகரித்துவிட்டதால் மீண்டும் கடத்தல் அதிகரித்துவிட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் கூறினர்.