தொடரும் மோடி அலை | இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் NDAவுக்கே வெற்றி.. கருத்துக்கணிப்பு முடிவுகள்!
இப்போது மக்களவைக்குத் தேர்தல் நடைபெற்றாலும், அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே 352 இடங்களை வெல்லும் என்று இந்தியா டுடே-சி-வோட்டர் நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. அதேநேரத்தில், இந்தத் தேர்தலில் பாஜக தனித்துப் பெரும்பான்மை பெறத் தவறியது. அது 240 இடங்களிலேயே வெற்றிபெற்றது. இது பெரும்பான்மைக்கு மிகவும் குறைவு. இதையடுத்து பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியு மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஆட்சியமைத்தது. ஆனால், ’இப்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றாலும் அதில் தேசிய ஜனநாயக் கூட்டணியே வெற்றி பெறும் என்றும், அது, 352 இடங்களை வெல்லும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு 47% ஆக உயரும் என்றும், மோடி அலை அப்படியே தொடரும்’ என்றும் இந்தியா டுடே-சி-வோட்டர் நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மேலும், அதில், ‘மக்களவைத் தேர்தல்கள் இப்போது நடத்தப்பட்டால், பாஜக 287 இடங்களைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்’ என்று கணித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2025இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பாஜகவுக்கு 260 இடங்களைக் கிடைக்கும் எனத் தெரிவித்திருந்தது. மேலும், டொனால்டு ட்ரம்ப் ஏற்படுத்திய புவிசார் அரசியல் பதற்றங்கள் இருந்தபோதிலும், பிரதமர் மோடியின் மீது வாக்காளர்களின் நம்பிக்கை அப்படியே உள்ளது எனவும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, 57% ஒப்புதல் மதிப்பீட்டையும் பெற்றுள்ளதாக MOTN கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், ஆகஸ்ட் 2025 MOTN கணக்கெடுப்பில் அவர் பெற்ற 58% மதிப்பீட்டிலிருந்து இது சற்றுக் குறைவாக உள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வலுவான வரி மற்றும் வர்த்தக மிரட்டல்களுக்கு இந்தியா வளைந்து கொடுக்காததும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒப்பந்தங்களை மேற்கொள்வதும், உள்நாட்டிலும் உலக அளவிலும் மோடியின் பிம்பத்தை உயர்த்தியுள்ளதாக அது தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இது i-n-d-i-a கூட்டணிக்கு 182 இடங்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 2025 MOTN கணக்கெடுப்பு கணித்த 208 இடங்களிலிருந்து கணிசமான சரிவைக் குறிக்கிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை, MOTN கணக்கெடுப்பு 80 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளது.
இது ஆகஸ்ட் 2025 பதிப்பில் கணிக்கப்பட்ட 97 இடங்களை விடக் குறைவானதாகும். இது, பாஜகவுக்கு எதிரான வாக்கு சோரி கதை பொதுமக்களிடம் அதிகம் எதிரொலிக்கவில்லை என்பதை காட்டுகிறது. 2024 தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெறத் தவறினாலும், அதற்குப் பிறகு வந்த ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் பீகார் போன்ற முக்கிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த கருத்துக்கணிப்பு, மேலும் பலத்தைக் காட்டியுள்ளது.

