\
₹35 Crore Vanish From PNB Accounts, Customers Left Shocked
Punjab National BankANI

வங்கிக் கணக்குகளில் இருந்து மாயமான ரூ.35 கோடி! PNB வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்பட்டது: காவல்துறை விசாரணை தீவிரம்!
Published on: 

செய்தியாளர் - M.மீரா

உத்தரபிரதேசத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் கிளையில் , வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகள் மற்றும் நிலையான வைப்பு தொகைகளில் இருந்து சுமார் ரூ 35 கோடி காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

PNB
PNBANI

கிரேட்டர் நொய்டாவின் ஐச்சார் பகுதியில் உள்ள PNB கிளையில் இந்தப் புகார்கள் எழுந்துள்ளன. வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் தங்களுக்குத் தெரியாமலும், தங்களின் அனுமதியின்றியும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுக்கு பணம் எடுக்கப்பட்டதற்கான எந்தவொரு SMS அலர்ட்டோ அல்லது OTP தகவலோ வரவில்லை என்றும், எந்த ஆவணத்திலும் தாங்கள் கையெழுத்திடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹனீஃப் கான் என்பவரின் சேமிப்புக் கணக்கில் ரூ.39 லட்சம் இருந்ததாகவும், தற்போது கணக்கில் பணம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பணத்தை மாற்றுவதற்கு எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை; வங்கியிலிருந்து எந்தக் குறுஞ்செய்தியும் வரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Punjab National Bank
Punjab National BankANI

விஜேந்திர சிங் என்ற விவசாயியின் கணக்கில் ரூ.87 லட்சம் முதல் ரூ.88 லட்சம் வரை இருந்த நிலையில், தற்போது வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைதான் இந்தப் பணம்.

இதேபோல், ஜெவார் விமான நிலையத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடாக ரூ.1.29 கோடி பெற்ற சந்தோஷ் என்ற 60 வயது பெண்ணின் கணக்கிலிருந்து ரூ.1.18 கோடி மாயமானதாகப் புகார் எழுந்துள்ளது. தேநீர் மற்றும் சமோசா விற்பனை செய்து வாழும் அவருக்கு, இந்தப் பணம் வாழ்நாள் சேமிப்பாக இருந்துள்ளது.

மேலும், ஜாகீர் என்பவரின் கணக்கிலிருந்து ரூ.9.5 லட்சம் காணாமல் போனதாகவும், வங்கிக்குச் சென்ற பிறகே இதுகுறித்து தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Punjab National Bank
Punjab National BankANI

இந்தப் புகார்களைத் தொடர்ந்து, வங்கிக் கிளை மேலாளர் உட்படப் பல ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வாடிக்கையாளர்களின் பணம் எவ்வாறு மாற்றப்பட்டது, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பாதிக்கப்பட்டவர்களின் பணம் மீட்கப்படுமா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விசாரணையின் முடிவில்தான் தெளிவான பதில் கிடைக்கும்.

₹35 Crore Vanish From PNB Accounts, Customers Left Shocked
மடித்தால் உடையும் iPhone திரை? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. ஆப்பிள் அறிவித்த Offer!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com