இந்தியாவில் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 33% அதிகரிப்பு
இந்தியாவில் ஒரு மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இது, கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை உருவாகியுள்ளதை காட்டுகிறது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு கடந்த வாரத்தில்தான் கொரோனா தொற்று பாதிப்பு 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல, இறப்பு விகிதமும் 6 வாரங்களில் இல்லாத அளவிற்கு கடந்த வாரத்தில் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கொரோனாவால் 1,55,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுவே, முந்தைய பிப்ரவரி மாதத்தின் 8 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 77,284 ஆக இருந்தது.
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தொடங்கியபிறகு, 4 வாரங்களில் இருமடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல, மார்ச் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையிலான காலத்தில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 887 ஆக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய பிப்ரவரி மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆக இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 14 நாட்களில் தொற்று எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளதால் அங்கு இன்றுமுதல் ஒரு வாரத்திற்கு முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும், அதாவது மார்ச் 7 முதல் 14 வரையிலான காலத்தில் மட்டும் நாக்பூரில் 12,773 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக நாள்தோறும் 1,800-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்படுவதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று முதல் அலையை விட இரண்டாம் அலை வெகு வேகமாகப் பரவுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஞாயிறன்று நிலவரப்படி நாக்பூரில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 16,964 ஆக உள்ளது. தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது நாக்பூர்.