’உனக்கு இதுதான் கடைசி நாள்’: எச்சரித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்!
’இதுதான் உனக்கு கடைசி இரவு’ என்று எச்சரித்த மனைவியை அடித்துக் கொன்றதாக, கணவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற ராஜூ. இவர் மனைவி நீலம் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள். ராஜூ துபாயில் வேலை பார்த்தார். இவர்களுக்குச் சொந்தமான வீடு, கோடா என்ற பகுதியில் இருக்கிறது. அதில் குழந்தைகளுடன் வசித்து வந்தார் நீலம். இந்நிலையில் அந்த வீட்டை விற்கப் போவதாகவும் அதனால் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றும் நீலத்திடம் கூறியுள்ளார், மாமியார். மறுத்துள்ளார் நீலம். இதனால் இருவருக்கும் பிரச்னை.
இந்நிலையில், ராஜூ துபாயில் இருந்து திரும்பினார். வீடு பிரச்னையில் மனைவிக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதோடு மனைவிக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது என்றும் சந்தேகம் கொண்டார் ராஜூ. இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி இருவருக்கும் மீண்டும் சண்டை. அப்போது, ’இதுதான் உனக்கு கடைசி இரவு, நாளைக்கு உயிரோட இருக்க மாட்டே’ என்று எச்சரித்தார் மனைவி.
சந்தேகம் அடைந்த ராஜூ, ஆட்களை வைத்து தன்னைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்திருப்பதாக நினைத்தார். அதற்கு முன் தாமே அவரை கொன்றுவிட தீர்மானித்தார். அதன்படி இரவு, தூங்கிக்கொண்டிருந்த மனைவியை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் தப்பி ஓடிவிட்டார்.
அக்கம்பக்கத்து வீட்டினர் இதுபற்றி காசியாபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ராஜூவை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

