பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்கள் தவிப்பு: மருத்துவ உதவித்தொகை வழங்கவில்லை என புகார்

பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்கள் தவிப்பு: மருத்துவ உதவித்தொகை வழங்கவில்லை என புகார்
பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்கள் தவிப்பு: மருத்துவ உதவித்தொகை வழங்கவில்லை என புகார்

இந்தியா முழுவதும் உள்ள 1.5 லட்சம் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 30 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவித்தொகை கடந்த முப்பது மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

பிஎஸ்என்எல் நிர்வாகம் போதிய நிதி இல்லை என மறுத்து வருவதாக அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ஓய்வூதியதாரர்கள் புற்றுநோய், இதயநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ரசீதுகளை மாநில தலைமை அலுவலகங்களில் சமர்ப்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம், மாநில அலுவலகங்களுக்கு மருத்துவச் சலுகைக்கான போதிய நிதியை வழங்கவில்லை. அதனால் தொகை நிலுவையில் இருப்பதாகவும் ஓய்வூதியதாரர் நலச்சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்களை சிகிச்சைக்கு அனுமதிக்க மருத்துவமனைகள் மறுத்துவருகின்றன.

ஓய்வூதியதாரர்களில் 90 சதவீதத்தினர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக மருத்துவச் செலவுகளைச் செய்துவருகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com