ஹரியானா மாநிலத்தில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் 30 மையங்களுக்கு அம்மாநில அரசு அதிரடியாக சீல் வைத்துள்ளது. அந்த அமைப்பினரிடம் இருந்து ஏகே 47 உள்ளிட்ட பல்வேறு ரக துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்த நிலையில் இந்த நடவடிக்கையை ஹரியானா அரசு எடுத்துள்ளது. இதற்கிடையில் ஹரியானாவில் கலவரங்கள் நிகழ்ந்த பகுதிகளில் பெரிதும் அமைதி திரும்பியதைத் தொடர்ந்து பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துகள் தொடங்கியுள்ளன. கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது. 269 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 552 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.