இந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமம் போலியானவை - நிதின் கட்கரி
இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மக்களவையில் மோட்டார் வாகனங்கள் சட்ட திருத்த மசோதா மீதான விவாதங்களின் போது நிதின் கட்கரி பேசினார். அப்போது பேசிய நிதின் கட்கரி, தற்போது உள்ள ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறை மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் குறித்து விமர்சிக்க வார்த்தைகளே இல்லை என்று காட்டமாக கூறினார்.
மேலும், “உலகத்திலே ஓட்டுநர் உரிமம் பெற எளிமையான வழி இருக்கிறது என்றால் அது இந்தியாவில்தான். அவ்வளவு எளிதாக ஓட்டுநர் உரிமத்தை பெற முடியும். ஓட்டுநர் உரிமத்தில் உள்ள புகைப்படத்தை பார்த்தால் அது அந்த ஓட்டுநருடனும் ஒத்துப் போகாது. சட்டத்தை மதிக்காமல், பயமில்லாமல் வாகனங்களை ஓட்டுகிறார்கள். ரூ50, ரூ100 அபராதத்திற்கு யாரும் பயப்படுவதில்லை. எவ்வித கவலையில்லாமல் போக்குவரத்து காவலர்களை கடந்து விதிமீறி செல்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த 4 வருடங்களாக இந்த மசோதாவை கொண்டு வர முடியாமல் நான் தோல்வி அடைந்துள்ளேன். தற்போது ஒருவழியாக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார் நிதின் கட்கரி.