109 மணி நேர போராட்டம்: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு
பஞ்சாப்பில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை 109 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.
பஞ்சாப் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தான். அங்கு துணியால் மூடப்பட்டிருந்த 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக கால் வைத்த குழந்தை உள்ளே சிக்கினான். உடனடியாக அவனது அம்மா குழந்தையை மீட்க போராடியுள்ளார். ஆனால் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்துக்கு சென்றுவிட்டான்.
இது குறித்த தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மீட்புப்படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் ஆழ்துளை கிணறு 150 அடி ஆழம் என்பதால் குழந்தையை மீட்கும் பணி சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேலான மீட்புப்படை அதிகாரிகளும், ராணுவத்தினரும் குழந்தையை மீட்க போராடினர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே பள்ளம் தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.
கிட்டத்தட்ட 4 நாட்கள் போராட்டத்துக்கு பின் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டான். உடனடியாக அவன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். குழந்தைக்காக பலரும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மீட்புப்படை, ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.