குழிக்குள் விழுந்த குழந்தை: 8 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்பு
போர்வெல் குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை ஒன்று 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் உள்ளது குலாசர் கிராமம். இங்குள்ள தம்பதியின் 3 வயது குழந்தை ராதா. வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது போர்வெல்லுக்காக தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்துவிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஒடி வந்து குழந்தையை மீட்க முற்பட்டனர். முடியவில்லை. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட்டாக்கில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் விரைவாக வந்தனர். அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போர்வெல் குழிக்குப் பக்கத்தில் மற்றொரு குழி தோண்டி, 8 மணி நேரம் போராடி குழந்தையை உயிரோடு மீட்டனர். குழந்தையைக் கண்டதும் பெற்றோர் கண்ணீர்விட்டு அழுதபடி அணைத்துக்கொண்டனர்.
குழந்தையை காப்பாற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட, போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவுக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். போர்வெல் குழி திறந்து கிடந்தது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.