\
3 year old boy crying after met his Foster parents
model imageGoogle gemeni

கதறி அழுத 3 வயது சிறுவன்.. கலங்கவைக்கும் சம்பவம்.. இரும்பையும் உருக்கும் வீடியோ!

தனது வளர்ப்பு பெற்றோரை பிரிந்து காப்பகத்தில் அடைக்கப்பட்ட 3 வயது சிறுவன், கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

இணையத்தில் வெளியாகும் ஒருசில வீடியோக்கள் நம்மைச் சிரிக்க வைக்கும், ஒருசில வீடியோக்கள் நம்மைப் பயமுறுத்தும். ஆனால், அரிதிலும் அரிதான வீடியோக்களால் மட்டுமே, உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை பார்வையாளர்களுக்கு கடத்த முடியும். அப்படியான வீடியோ ஒன்று வெளியாகி, நெட்டிசன்களை உருக்கம் அடைய வைத்துள்ளது. அதாவது, தெலங்கானா மாநிலம் ஜகத்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, சில வருடங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த 5 நாட்களிலேயே, அந்த பெண் மரணம் அடைந்திருக்கிறார். இதனால், சரிதா - ஸ்ரீனிவாஸ் என்ற தம்பதியினர், அந்த குழந்தையை சட்டவிதிகளை பின்பற்றாமல், தத்தெடுத்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக அந்த குழந்தையை அவர்கள் வளர்த்து வந்த நிலையில், முறையான தத்தெடுப்பு ஆவணங்கள் இல்லை என்று கூறி, தம்பதியிடம் இருந்து குழந்தையை பிரித்து, காப்பகத்தில் அதிகாரிகள் சேர்த்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை பார்ப்பதற்காக காப்பகத்திற்கு சென்றபோது, அந்த சிறுவன் தனது வளர்ப்பு பெற்றோரை பார்த்து, அழுது புலம்பியுள்ளான். அந்த தம்பதியும் குழந்தையை கட்டியணைத்து அழுதுள்ளனர்.

இந்து பாரம்பரிய சடங்குகளின்படி குழந்தையை தத்தெடுத்துள்ளோம். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகினோம். கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி அன்று, குழந்தையை தங்களிடம் ஒப்படைக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், குழந்தைகள் நல அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று, அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். தங்களை பிரித்து காப்பகத்தில் இருப்பதால், சிறுவனின் உடல்நிலையும், மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வளர்ப்பு பெற்றோரை பார்த்து அந்த சிறுவன் அழுவது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பாசத்துடன் வளர்த்துவிட்டு தற்போது குழந்தையை விட்டு பிரிந்து இருப்பது, அந்த தம்பதியினருக்கு கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், குழந்தைகளின் நலனை பாதுகாப்பதற்காகதான், பல்வேறு தத்தெடுப்பு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. தம்பதிகள் ஏன் குழந்தைகளை தத்தெடுக்கிறார்கள்? அவர்களது ஆண்டு வருமானம் என்ன? தத்தெடுப்பவர்களுக்கும், குழந்தைக்கும் இடையே எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும்? போன்ற பல்வேறு விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் வலுவாக இருப்பதால், ஒருசிலர் இவ்வாறு சட்டவிரோத முறைகளில், குழந்தைகளை தத்தெடுக்கின்றனர். நல்ல எண்ணத்துடன் குழந்தைகளை வளர்க்க நினைக்கும் சில நபர்களும், இதுமாதிரியான முறைகளை கையாள்வதுதான், இந்த மாதிரியான சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.