அரியவகை சிகப்பு நிற மண்ணுளி பாம்பைக் கடத்திய மூவர் கைது
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் அரிய வகை பாம்பைக் கடத்த முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பைக்கு கடத்தி செல்லும் வழியில் அவர்கள் பிடிப்பட்டனர். 2.5 அடி நீளம் கொண்ட இந்தப் பாம்பின் மதிப்பு 1 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பயன்பாட்டிற்காக இந்தச் சிகப்பு நிற மண்ணுளி பாம்புகள் கடத்தப்படுதாகவும், கள்ளச் சந்தையில் இதற்கான தேவை அதிகரித்துள்ளதால் இது போன்ற கடத்தலில் பலர் ஈடுபடுவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
“சிகப்பு நிற மண்ணுளி பாம்புகளுக்கு சர்வதேச சந்தைகளில் அதிக மவுசு இருக்கிறது. குறிப்பாக சீனா மற்றும் மலேசியா நாட்டில் இந்தப் பாம்புகளுக்கு கிராக்கி. அந்த நாடுகளில் பிளாக் மேஜிக் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த வகை பாம்புகள் இருந்தால் செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையும் உள்ளது. இந்தப் பாம்புகள் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 3-4 கிலோ எடை கொண்ட பாம்பு 25 லட்சம் ரூபாய் வரைக்கும் விலை போகும். ஆனால், கோடிகளில் விற்பனை ஆகும்” என்கிறார் வனத்துறை அதிகாரி.
மேலும் இந்த அரியவகை பம்புகளை வனவிலங்கள் பாதுகாப்புச் சட்ட பிரிவு 4 கீழ் வனத்துறையினர் பாதுகாத்து வருவதாகவும், இதை கடத்தினால் 7ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூறுகையில், “எனக்கு எதுவும் தெரியாது. மருத்துவ தேவைக்காக அந்த வகை பாம்பு வேண்டும் என்று பெண் ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்காக பணமும் கொடுத்தார்” என்றார்.