வங்கிகள் காத்திருக்க மல்லையாவுக்கு ஜோராக நடக்குது கல்யாணம்
பல்வேறு வங்கிகளில் 9000 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. மதுபான கம்பெனி, ஐபிஎல் அணி, விமான நிறுவனம் என கொடிகட்டி பறந்த மல்லையாவுக்கு வங்கிகள் தயக்கமில்லாமல் வாரி வழங்கின. கடைசியில் டாட்டா காட்டிவிட்டு எங்கேயோ சென்று விட்டார்.
பதறிப்போன வங்கிகள் உச்சநீதிமன்றத்தையும், பல்வேறு மாநில உயர்நீதிமன்றத்தையும் நாடின. மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. சிபிஐ வழக்கை கையிலெடுத்து விசாரிக்க ஆரம்பித்தது. அப்படி விசாரணை நடத்திய போதுதான் மல்லையா லண்டனில் இருப்பது தெரிய வந்தது. லண்டன் குடிமகனாகவே மாறிப்போயிருந்தார் மல்லையா. இப்போது வரை அவரை இந்தியாவுக்கு அழைத்துச் கொண்டுவர முடியாமல் அரசு திணறுகிறது.
இந்நிலையில் மல்லையா வெளிநாடு சென்ற போது , உடன் சென்றவர்தான் அவரது காதலி பிங்கி லல்வாணி. மல்லையாவின் அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்த ஒரே நபர். 2016 முதல் மல்லையாவோடு இருக்கிறார். கடந்த பிப்ரவரியோடு இவர்கள் இருவரும் இணைந்து மூன்று வருடங்கள் ஆனதை மிகச் சிறப்பாக லண்டனில் மல்லையா கொண்டாடினாராம். இந்நிலையில் தான் பிங்கியையே திருமணம் செய்து கொள்ள மல்லையா முடிவெடுத்துள்ளார்.
வங்கிகள் அனைத்தும் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்க, லண்டன் நீதிமன்ற உத்தரவுக்காக சிபிஐ காத்திருக்க , எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மூன்றாவது திருமணத்துக்கு தயாராகி இருக்கிறார் மல்லையா.