பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூவர் சுட்டுக்கொலை..!
இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூவரை சுட்டுக்கொன்றதாக, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், அதிருப்தியில் உள்ள பாகிஸ்தான், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐந்து இந்திய வீரர்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட தகவலை, இந்தியா உடனடியாக மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் போலியான தகவலை பாகிஸ்தான் வெளியிடுவதாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.