
பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால் உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள அன்சல் பிளாசா மாலில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு நேற்று முன்தினம் (நவ.9) இரவு 10:30 மணியளவில் வந்த 3 நபர்கள் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மூவரில் ஒருவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் உணவக ஊழியர் காயமடைந்தார். இந்த தாக்குதல் சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்ட நொய்டா போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பிரவேஷ், மனோஜ் மற்றும் க்ரெஸ் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.