மூன்று மொழி கொள்கை திருத்தம்: எதிர்ப்பு தெரிவிக்கும் குழு உறுப்பினர்கள்
மூன்று மொழி கொள்கை குறித்து திருத்தம் செய்யப்பட்டதற்கு வரைவுக் கொள்கையை தயாரித்த குழுவின் உறுப்பினர்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம், கர்நாடாக உள்பட பல மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என திருத்தப்பட்ட வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் 3-வது மொழியாக இந்தியை கட்டாயமாக பயில வேண்டும் என்பது அவசியமில்லை.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தப்பட்ட கல்வி கொள்கையில், மூன்று மொழி தொடர்பான திருத்தத்திற்கு வரைவுக் கொள்கையை வடிவமைத்த குழுவின் உறுப்பினர்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை வடிவமைக்க கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ராம் சங்கர் குரில் மற்றும் கே.எம். திரிபாதி ஆகியோர் மத்திய அரசின் திருத்தப்பட்ட கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திருத்தம் குறித்து வரைவு கொள்கை அமைத்த குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
அந்த மின்னஞ்சல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராம் சங்கர் குரில், “மூன்று மொழி தொடர்பான விவகாரத்தில் திருத்தம் செய்த மத்திய அரசின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய திரிபாதி, “மத்திய அரசு குழுவின் உறுப்பினர்களிடம் விவாதிக்காமல் இந்த முடிவை எடுத்தது கண்டனத்திற்குறியது” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவில் ராம் சங்கர், திரிபாதி உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.