“மேகதாது அணை கட்ட மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை” - மசூத் ஹூசைன்

“மேகதாது அணை கட்ட மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை” - மசூத் ஹூசைன்
“மேகதாது அணை கட்ட மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை” - மசூத் ஹூசைன்

காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கினால்தான் மேகதாது அணையை கட்ட முடியும் என ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் பொதுப்பணித்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் பங்கேற்றார். 

இதேபோல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது குறித்து இந்தக் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய தலைவர் மசூத் ஹூசைன், “இன்று நடைபெற்ற கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது; சில விஷயங்களில் முடிவு எடுத்துள்ளோம். காவிரி விவகாரத்தில் அனைத்து உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தோம். இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது; காவிரி படுகை பகுதிகள் நல்ல மழை பெற்றிருக்கின்றன.

மேகதாது அணை விவகாரத்தில் மேலாண்மை ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. அவற்றை கவனத்தில் கொள்வோம். மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை. மத்திய நீர் வள ஆணையம் தனது அதிகார வரம்பிற்குட்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறது” என்று கூறினார். 

இதனையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் ஜனவரியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com