2ஜி முறைகேடு வழக்கு: நவ.7ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நவம்பர் 7ல் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2ஜி ஏலத்தில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக 2010 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அ.ராசா, கனிமொழி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி நிறைவுற்றது. தீர்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2ஜி வழக்கில் அக்டோபர் 25 ஆம் தேதி அல்லது அடுத்த ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கனிமொழி, ராஜா உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி நவம்பர் 7ல் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். கூடுதல் ஆவணங்களை சேர்க்க வேண்டிய பணிகள் நடப்பதால் தாமதம் ஏற்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி குறிப்பிட்டார்.