கடைசிவரை மகளை பார்க்க முடியாமலேயே வீர மரணம் அடைந்த குமார் ஓஜா..!

கடைசிவரை மகளை பார்க்க முடியாமலேயே வீர மரணம் அடைந்த குமார் ஓஜா..!
கடைசிவரை மகளை பார்க்க முடியாமலேயே வீர மரணம் அடைந்த குமார் ஓஜா..!

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குண்டன் குமார் ஓஜா கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் தந்தையானார் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், நேற்று இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட 20 வீரர்களில் ஒருவரான குண்டன் குமார் ஓஜாவை பற்றி ஒரு உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்புதான் தந்தையாகி உள்ளார். அதற்காக ஜார்க்கண்டில் தனது பெண் குழந்தையைப் பார்க்க வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

மேலும் குண்டன், தனது மகள் தீக்ஷா பிறந்தபோது கடைசியாக பேசியதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது குறித்து பேசிய குண்டனின் மூத்த சகோதரர் முகேஷ் ஓஜா, “அவர் 17-18 நாட்களுக்கு முன்புதான் தந்தையானார். இந்திய-சீனா எல்லையில் பதற்றம் தணிந்தவுடன், விரைவில் தீக்ஷாவைப் பார்க்க வருகிறேன் என்று அவர் தனது மனைவி நமிதா தேவிக்கு உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த நாள் ஒருபோதும் இனிமேல் வராது. தனது மகளை பார்க்க வேண்டும் என்ற அவரது விருப்பம் ஒருபோதும் நிறைவேறாமலேயே போய்விட்டது”என்று தெரிவித்துள்ளார்.

மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 440 கி.மீ தொலைவில் உள்ள சாஹெப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள திஹாரி கிராமத்தைச் சேர்ந்தவர் குண்டன். கடந்த 2011-ஆம் ஆண்டு ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். குண்டன் 2018 இல் தான் திருமணம் செய்து கொண்டார்.

குண்டனின் தந்தை ரவிசங்கர் ஓஜா ஒரு விவசாயி. தாய் பவானி தேவி இல்லத்தரசி. தேவிக்கு மூன்று பிள்ளைகள். குண்டன் அவர்களின் இரண்டாவது குழந்தை. இவர்களுக்கு தங்களின் மகனின் மறைவு வருத்தமாக இருந்தபோதிலும், அவரது தியாகத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்கள். முகேஷ் கூறும் போது, "நாட்டிற்காக தனது உயிரைக் கொடுத்த எங்கள் சகோதரரைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். தேவைப்பட்டால், எனது 23 வயது தம்பி கன்ஹியா குமாரும் நானும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து எங்கள் கடைசி மூச்சு வரை எல்லையில் எதிரியுடன் போராடுவோம் ”என வீர முழக்கமிட்டு பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com