\
25,000 cops and 300 cameras Delhi Police plan to contain CJP protest
delhi police warnsreuters

25,000 போலீஸ்.. 300 கேமராக்கள்.. CJP-இன் போராட்டத்தைச் சமாளிக்க தயாராகும் டெல்லி!

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், போராட்டத்தை நடத்துவோம் என CJPயினர் தெரிவித்துள்ளனர்.
Published on: 
Summary

டெல்லியில் அனுமதி பெறாமல் நடத்தத் திட்டமிடப்பட்ட பேரணி மற்றும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, டெல்லி காவல்துறையும் மத்தியப் பாதுகாப்புப் படைகளும் இணைந்து முன்னெச்சரிக்கை பாதுகாப்புத் திட்டங்களை மேற்கொண்டுள்ளன. அதேநேரத்தில், பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க மெட்ரோ சேவைகளை முழுமையாக முடக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR)மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களர் அட்டைகளைப் பெற்றிருந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் எனப் பல வாக்களர்கள் நீக்கப்பட்டனர். இதற்கிடையே, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு, இரண்டு தேர்தல் ஆணையர்களே எதிர்ப்பைப் பதிவு செய்திருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.

delhi protest
delhi protestANI

மேலும் போராட்டத்தையும் தீவிரப்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். ஆனால், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், போராட்டத்தை நடத்துவோம் என CJPயினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவுவதுடன், அதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், டெல்லி காவல் துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) உள்ளிட்ட 25,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் டெல்லி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தர், ஜன்பத், தேர்தல் ஆணையத் தலைமையகம் மற்றும் டெல்லி காவல் துறைத் தலைமையகம் அமைந்துள்ள 1.5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதி மிக முக்கியமான பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு மட்டும் 6,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ வசதி கொண்ட சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

delhi police warning
delhi police warningANI

இவை தவிர, கூடுதல் உதவி ஆணையர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் அதிகாரிகளுக்கு உடம்பில் அணியும் 'பாடி கேமராக்கள்' (Body Cameras) வழங்கப்பட்டுள்ளன. மேலும், சம்பவங்களை உடனுக்குடன் ஆதாரமாகப் பதிவு செய்ய 100-க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோகிராஃபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டு சட்ட ஒழுங்கை மீறுபவர்களைத் தடுத்து வைக்க டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 12 தற்காலிகத் தடுப்புக் காவல் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க மெட்ரோ சேவைகளை முழுமையாக முடக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறையினர் அமைதியாகவும் தொழில்முறை ஒழுங்குடனும் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com