\
25 Years Later: P.T.R. Shares Memories of the 9/11 Attack on America
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்Pt web

25 ஆண்டுகளாக மாறாத வடு.. அமெரிக்காவை உறையவைத்த 9/11 தாக்குதல்! நினைவுகளைப் பகிரும் பி.டி.ஆர்.

செப்டம்பர் 11, 2001-இந்த நாளை உலக நாடுகள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
Published on

தூங்கா நகரமான நியூயார்க்கின் அடையாளமாகத் திகழ்ந்த அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் (Twin Towers) பயங்கரவாதத் தாக்குதலில் முற்றிலும் தகர்க்கப்பட்ட நாள். நகரம் எங்கும் கரும்புகை சூழ்ந்தது. மக்களின் கண்களில் மரண பீதி; அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாத அச்சம். 21ஆம் நூற்றாண்டின் பெரும் துயரமாகவும், உலகையே உறையவைத்த கொடூரத் தாக்குதலாகவும் அமைந்த 9/11 தாக்குதலில் 2,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வல்லரசு நாடான அமெரிக்காவை கதிகலங்க வைத்த அந்தக் கொடூரத் தாக்குதல் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ptr x post
ptr x post x

இந்நிலையில், 9/11 தாக்குதல் நடைபெற்றபோது நியூயார்க்கில் இருந்தவர் திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்றைய தனது நினைவுகளை செப்டம்பர் 11 ஆம்தேதியான இன்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் தனது பதிவில், “இருபத்தைந்து ஆண்டுகள் என்பது நீண்ட காலம். ஆனால், அழியாத பாடங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, மிகவும் தெளிவான, பிரகாசமான காலைப் பொழுதாக இருந்ததாகவும், தான் World Trade Center-ன் அடித்தளத்தில் இருந்த PATH ரயிலில் இருந்தபோதுதான் முதல் விமானம் North Tower-ஐத் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செல்போன் நெட்வொர்க்குகள் சிறிது நேரத்திலேயே செயலிழந்த நிலையில், இறுதியில் சில மைல்கள் நடந்தே வீட்டுக்குச் சென்று, மதியம் சுமார் 2 மணியளவில் தனது பெற்றோரை landline தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தான் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட துயரமான சூழல் இன்றும் தனது நினைவில் தெளிவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குப் பின்னரும் அந்தப் பகுதி பல மாதங்கள் புகைந்து கொண்டிருந்ததாகவும், தனது வீட்டின் பால்கனியில் படிந்த கரும்புகையை வாரந்தோறும் சுத்தம் செய்ய வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ptr palanivel thiagarajan
ptr palanivel thiagarajanpt

25 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தச் சம்பவம் கற்றுத்தந்த பாடங்கள் மாறவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், “எதுவும் நிரந்தரமானதல்ல. மிகவும் வலிமையான கட்டிடங்கள்கூட, மிகப்பெரிய நிறுவனங்கள்கூட அல்ல. உயிரிழப்பைத் தவிர, எந்த இழப்பும் மீட்டெடுக்க முடியாதது அல்ல” எனத் தெரிவித்து, சில புகைப்படங்களையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com