ஒருதலைக் காதலால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் விரிவுரையாளர் மரணம்..!

ஒருதலைக் காதலால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் விரிவுரையாளர் மரணம்..!
ஒருதலைக் காதலால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் விரிவுரையாளர் மரணம்..!

ஒருதலைக் காதலால் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி விரிவுரையாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வார்தா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரியும் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் வழக்கம் போல் கடந்த வாரம் கல்லூரிக்குச் சென்றார். அப்போது காலை 7.15 மணியளவில் ஹிங்கன்காட் நகரில் அரசுப் பேருந்து ஒன்றிலிருந்து இறங்கி நடந்து சென்ற அந்தப் பெண்ணை, ஒருவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். சற்றும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்தப் பெண் மீது பெட்ரோலை ஊற்றி அந்த நபர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

அப்போது அவ்வழியே வந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த அப்பெண் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர், தீக்காயங்களுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரைச் சேர்த்தனர். இந்த விபத்தில் 40 சதவீத தீக்காயங்களுடன் அந்தப் பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

விரிவுரையாளரான அந்தப் பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ஒருவர்தான் இந்தக் கொடூர செயலை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணையின் மூலம் தெரியவந்தது. அந்த நபரின் பெயர் விக்கி நாக்ரலே என்பதும், அவர் தனது மோட்டார் சைக்கிளிலிருந்த பெட்ரோலை பயன்படுத்தி அப் பெண்ணின் மீது தீ வைத்ததாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர். மேலும் தீவிர விசாரணைக்குப் பின்னர் விக்கியை போலீசார் கைதும் செய்தனர்.

இந்நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த அந்தப் பெண் இன்று காலை 6.55 மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை ஹிங்கன்காட் (Hinganghat) போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யவீர் பந்திவார் செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்தப் பெண்ணின் உச்சந்தலை மற்றும் முகம், வலது கால், இடது கை, முதுகு, கழுத்து எனப் பல இடங்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாலும் உடல் முழுவதும் செப்டிக் ஆகிவிட்டதாலும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதாலும் அவர் உயிரைக் காப்பாற்றுவதில் சவால்கள் இருந்ததாகவும் மருத்துவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், உடற்கூராய்விற்குப் பிறகு பெண்ணின் உடல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பெண்ணின் உறவினர்கள் உடலைப் பெற மறுத்து போராட்டம் செய்தனர். மேலும் உயிரிழந்த விரிவுரையாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி மறியல் செய்தனர்.

ஆகவே, இவரது மரணத்தைத் தொடர்ந்து எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் இருக்க ஹிங்கன்காட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தப் பெண் குடியிருக்கும் பகுதிக்கு ஆம்புலன்சில் உடலைக் கொண்டு சென்றபோது அங்கே எதிர்பாராதவிதமாக லேசான கலவரம் வெடித்தது. அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. ஆகவே காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்தனர். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com