பீகார்: மயக்கமருந்தே கொடுக்காமல் 24 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன்: டாக்டரின் ஷாக் விளக்கம்!

பீகார்: மயக்கமருந்தே கொடுக்காமல் 24 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன்: டாக்டரின் ஷாக் விளக்கம்!
பீகார்: மயக்கமருந்தே கொடுக்காமல் 24 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன்: டாக்டரின் ஷாக் விளக்கம்!

வயிற்று வலி சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவரே திருடிய விவகாரத்திற்கே இன்னும் தீர்வு கிடைக்காமல் இருக்கும் வேளையில், பீகாரின் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 24 பெண்களுக்கு மயக்க மருந்தே கொடுக்காமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

பீகாரின் ககாரியா என்ற பகுதியில் உள்ள இரண்டு அரசு ஆரம்ப பொது சுகாதார மையத்தில் சுமார் 24 பெண்களுக்கு மயக்க மருந்தே கொடுக்காமல், வலியால் அலறிக் கொண்டிருக்கும் போதே கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த கொடூரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தச் சொல்லி ககாரியா மாவட்ட மாஜிஸ்திரேட் அலோக் ரஞ்சன் கோஷ் பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அடிப்படையாக கொண்டு உத்தரவிட்டிருக்கிறார்.

இப்படி இருக்கையில், “அறுவை சிகிச்சை செய்யும் போது எனது கை, கால்களை நான்கு பேர் இறுக்கமாக பிடித்துக் கொண்டனர். நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போதே மருத்துவர் கருத்தடை அறுவை சிகிச்சையை செய்து முடித்தார். ஆபரேஷன் முடிந்த பிறகு போடப்பட்ட ஊசிக்கு பிறகே மரத்துப்போனது போல உணர்ந்தேன்” என அலுவாலி சுகாதார மையத்தில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட குமாரி பிரதிமா வலி கொடுத்த வேதனையோடு பகிர்ந்ததை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடந்த வார இறுதியில் ககாரியாவில் உள்ள கிராமங்களில் அரசு சாரா அமைப்பு நடத்திய முகாமில் 53 பேர் கொண்ட குழுவினரின் ஒரு பகுதியான 24 பெண்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பந்தபட்ட NGO உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் மாவட்ட மாஜிஸ்திரேட் அலோக் ரஞ்சன் கோஷ் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், இரண்டு சுகாதார மையங்களுக்கும் பொறுப்பான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறுவை சிகிச்சை மருத்துவர் அமர்நாத் ஜா தெரிவித்திருக்கிறார். அலுவாலி சுகாதார மையத்தின் பொறுப்பதிகாரியான மருத்துவர் மணிஷ் குமார், “கருத்தடை சிகிச்சைக்கான பணிகளில் ஈடுபட்டுள்ள குளோபல் டெவலெப்மென்ட் என்ற தன்னார்வ அமைப்பை கருப்புப் பட்டியலில் வைத்திருக்கிறோம்” என்றிருக்கிறார்.

ஆனால், பார்பட்டா சுகாதார நிலையத்தின் பொறுப்பாளரும் மருத்துவருமான ராஜிவ் ரஞ்சன், “அனஸ்தீசியா கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சரியாக வேலை செய்யாமல் போயிருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டும், வெவ்வேறு உடலமைப்பாக இருந்ததால் பயன் கொடுக்காமல் போயிருக்கிறது” என விளக்கம் கொடுத்திருக்கிறார். இப்படி இருக்கையில், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பீகார்வ் மருத்துவர்களின் மருத்துவ உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் (NCW) கோரியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com