ராஜஸ்தானில் பயங்கர புழுதிப் புயல்: 24 பேர் பலி, 100 பேர் காயம்!
ராஜஸ்தானில் ஏற்பட்ட கடும் புழுதிப் புயல் காரணமாக, 24 பேர் பலியாகியுள்ளனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள் ளனர். பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர், அல்வார், தோல்புர், ஜுஞ்ஹுனு, பிக்கனர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு கடும் புழுதிப் புயல் வீசியது. இதில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. மின்கம்பங்கள் சரிந்துவிழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடு த்து பல மாவட்டங்கள் இருட்டில் மூழ்கின.
‘இந்தப் புழுதி புயல் காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமான மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதை சரி செய்ய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்’ என்று அல்வார் பகுதி மின் விநியோக பொறியாளர் டிபி. சிங் தெரிவித்தார். நிவாரண மற்றும் மீட்பு பணிகள் நடந்து தொடர்ந்து வருகின்றன. படுகாயம்டைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
முதலமைச்சர் வசுந்தரா ராஜே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்துசெய்துள்ளார். ரத்த தான முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ள அவர், ’எதிர்பாராத இந்தப் புழுதி புயலில் 22 பேர் இறந்திருப்பது வருந்தத்தக்கது’ என்று கூறியுள்ளார்.