70 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி... 23 புதிய முகங்கள்..!
டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான 70 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 8-ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகவே அனைத்து கட்சிகளும் அதற்கான வேலைகளில் மிக மும்முரமாக உள்ளன. கடந்த இரண்டு முறை நடந்த டெல்லி சட்டசபை தேர்தலிலும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. ஆகவே தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க அக்கட்சி பல உத்திகளை கையாண்டு வருகிறது. அதனை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல யூகங்களை வகுத்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லி சட்டசபைத் தேர்தலில், 70 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. வெளியான பட்டியலின்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பட்பர்கஞ் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் 23 புதிய முகங்களை வேட்பாளர்களாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அத்துடன் ராஜீந்தர் நகர் தொகுதியில் ராகவ் சாதா போட்டியிடுகிறார். அதிஷி, கல்காஜியில் போட்டி போடுகிறார். அதிஷி, கிழக்கு டெல்லி தொகுதியில் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் தோற்றவர். ராகவ் சதா, தென் டெல்லியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியிடம் தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“மொத்தம் 70 தொகுதிகளுக்கான இந்த வேட்பாளர்களின் பெயர் பட்டியலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் தற்போது எம்.எல்.ஏக்கள் ஆக உள்ள 46 பேர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 15 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்த 70 பேரில் 8 பெண்கள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் 6 பெண்கள் இருந்தனர் ”என்று சிசோடியா கூறினார்.

