பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த 2 நாட்களில் 23 பேர் உயிரிழப்பு: அமைச்சர் விளக்கம்

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த 2 நாட்களில் 23 பேர் உயிரிழப்பு: அமைச்சர் விளக்கம்

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த 2 நாட்களில் 23 பேர் உயிரிழப்பு: அமைச்சர் விளக்கம்
Published on

பீகாரில் கடந்த இரண்டு தினங்களில் 23 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த நிலையில், இதுவரை 700 அரசு அதிகாரிகள் கள்ளச்சாராயம் விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக பீகார் அமைச்சர் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், மதுவிலக்கின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி கடந்த இரண்டு தினங்களில் 23க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த உயிர் இழப்புகள் கள்ளச்சாராயத்தால்தான் ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில அமைச்சர் சுனில் குமார் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த சம்பவம் உள்ளூர் மட்டத்தில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக இரண்டு காவல்நிலைய பொறுப்பாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஆய்வு செய்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும், மதுவிலக்கு அமலுக்கு வந்ததில் இருந்து கடுமையான நடவடிக்கைகளை பீகார் அரசு மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை 187 லட்சம் லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தொடர்புடைய 3 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 60,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது, இதில் தவறு செய்யும் எவருக்கும் கடுமையான தண்டனை என்ற வகையில் இதுவரை அரசு அதிகாரிகள் 700க்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 70 பேர் உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com