2019 மத்திய பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் எதிர்ப்பும் ஆதரவும்
2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். வருமான வரி சலுகை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் வெளியாகியுள்ளன.
மாதம் ரூ.15 ஆயிரத்துக்கு கீழ் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், 8 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும், 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும், கால்நடை, மீன் வளர்ப்புத்துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3 சதவீதம் வட்டி சலுகை அறிவிக்கப்படும் என பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர் கருத்து தெரிவித்துள்ளனர். விவசாயிகள் மேலும் கடன் வாங்காத அளவுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றியுள்ளது என்றார். விவசாயிகள் மேலும் கடன் வாங்குவதை தவிர்க்க அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு பட்ஜெட்டும் நடுத்தர மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அருண் ஜெட்லி, பியூஷ் கோயல் தாக்கல் செய்தது சிறப்பான, தரமான பட்ஜெட் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான மத்திய இடைக்கால பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் இல்லை, வாக்குகளுக்கான பட்ஜெட் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிதம்பரம், நாட்டின் வளத்தில் ஏழைகளுக்கே முதல் உரிமை என்ற காங்கிரஸ் கொள்கையின் நகலை காப்பியடித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலை ஏற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக மூத்த எம்.பி. திருச்சி சிவா விமர்சித்தள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டினால் எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்புகளை கொண்ட பட்ஜெட் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். நான்கரை ஆண்டுகளாக உச்சவரம்பை உயர்த்தாதது ஏன்? எனவும் வாக்கு வாங்க வேண்டும் என்பதே பட்ஜெட்டின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தை வலுபெறச்செய்யும் வகையில் அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குழந்தைகளுக்கு சொல்லக்கூடிய கதை போல உள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி, இடைக்கால பட்ஜெட் குளிர்கால விசித்திர கதைபோன்று உள்ளது. பட்ஜெட்டை சிறப்பாக முடிக்க வேண்டும் என மத்திய அரசு நினைத்தாலும் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் தாமதமாக வந்தவைதான் என விமர்சித்துள்ளார்.