\
Rahul Gandhi
Rahul GandhiANI

உங்கள் அரசின் 200 அதிகாரிகள் எங்களுடன்! - பிரதமருக்கு ராகுல் காந்தி சவால்

தேர்தல் முறைகேடு விவகாரம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகும் இந்தியா கூட்டணி!
Published on: 
Summary

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் முறைகேடு புகார்களை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்தார். மோடி தலைமையிலான மத்திய அரசின் 200 அதிகாரிகள் எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அரசியலமைப்பை காப்பாற்ற போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் - M. மீரா

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது தேர்தல் முறைகேடு புகார்களை முன்வைத்து, இந்தியா கூட்டணித் தலைவர்கள் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் உள்ள 200 அதிகாரிகள் எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தங்களுக்குத் தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திரா பவனில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணி உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்காக, பிற்பகல் 1.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பைக் காப்பதற்கான போராட்டம் இது என்றும், ராகுல் காந்திக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான தனிப்பட்ட போராட்டம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். அரசியலமைப்புக்கு ஆபத்து இருப்பதாகக் கருதும் பாஜகவினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பணியாற்றும் 200 அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்; எங்களுக்குத் தகவல்களையும் தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI), வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் அடங்குவர்..

Protests in Delhi
Protests in Delhi ANI

மேலும், காவல்துறையினர், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் பொதுமக்களில் பலர் தங்களது போராட்டத்தை ஆதரிப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான முறைகேடுகளைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி இந்தப் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் ஏற்கெனவே போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரணி காரணமாகப் போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முறைகேடு குறித்த புகார்களுடன் எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகத் தயாராகியுள்ளதால், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Rahul Gandhi
தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்வது சாத்தியமா? சட்ட நடைமுறை என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com