தோழனுடன் செல்ஃபி: கும்பல் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை
கர்நாடகாவில் இளம் பெண் ஒருவர் தோழனுடன் செல்ஃபி எடுத்ததால், ஒரு கும்பல் மிரட்டிவிட்டுச் சென்றது. இதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடக மாநிலம் சிக்மகளூருவை சேர்ந்தவர் தன்யா ஸ்ரீ (20). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தார். வேற்று மதத்தை சேர்ந்த தனது வகுப்பு தோழனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். நாளடைவில் இந்த புகைப்படம் வாட்ஸ்அப்பில் பரவியது. இதனையடுத்து அந்த பெண்ணின் இல்லத்திற்கு வந்த சிலர், இதுகுறித்து விசாரித்துள்ளனர். இத்துடன் வகுப்பு தோழனுடனான உறவை முறித்துக்கொள்ளவில்லை என்றால் முடிவு விபரீதமாக இருக்கும் என எச்சரித்தனர். இதனையடுத்து அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதிய கடிதம் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஃபேஸ்புக்கில் பதிவிட்டுருந்த புகைப்படத்தை வாட்ஸ்ஆப்பில் பரப்பியது யார் என தேடி வருகின்றனர். அந்தப்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக 5பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.