லடாக் எல்லை மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் : இந்திய ராணுவம்

லடாக் எல்லை மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் : இந்திய ராணுவம்
லடாக் எல்லை மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம்  : இந்திய ராணுவம்

இந்திய - சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய மற்றும் சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் மற்றும் இராணுவப் படைவீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்ததாக இன்று அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தி, பிரதமரிடம் விளக்கமளித்தனர்.

இந்நிலையில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதே அளவில் சீன தரப்பிலிருந்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் 20 பேர் உயிரிழந்த தகவலை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. 

இதுதொடர்பாக தொலைபேசியில் புதிய தலைமுறையிடம் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் அதிகாரி தியாகராஜன், நேற்று மாலை 6 மணியளவில் பிரச்னை ஏற்பட்டதாக கூறினார். சீன படை வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி நின்றுகொண்டிருந்ததாகவும், அவர்களை ஒப்பந்தப்படி வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் செல்லுமாறு இந்திய ராணுவ கர்னல் அறிவுறுத்தியதாகவும் கூறிய தியாகராஜன், அப்போது திடீரென சீன படையினர் இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் இந்திய கர்னலை தாக்கியதாக குறிப்பிட்டார். பின்னர் இந்திய படையினரும் அங்கு வேகமாக வந்து தாக்கியதாகவும், பின்னர் சீனப்படையினரும் தாக்கியதாகவும், இந்த மோதல் இரவு வரை நீண்டதாகவும் கூறினார். இருப்பினும் இந்திய ராணுவத்தினர் எல்லைப்பகுதியை விட்டுத்தர சமரசம் செய்யமாட்டோம் என்பதை சீனாவிற்கு உணர்த்தியுள்ளதாகவும், 1962ஆம் ஆண்டில் இருந்த இந்தியா தற்போது இல்லை என்பதை சீனாவிற்கு புரிய வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com